சேலம் மேட்டூர் அடுத்துள்ள சிந்தாமணியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி வளாகத்திலும் விரிவான ஆய்வு மேற்கொண்டு பயன்பாடு இல்லாத கட்டடங்களை மறு சீரமைப்பு அல்லது அரசு அனுமதியோடு இடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் பேசினார். அப்போது அவர் கூறியது. "பள்ளி மேலாண்மைக்குழு, அரசுப் பள்ளிகளை மறுகட்டமைக்க உருவாக்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்குழு மாற்றியமைக்கப்படுகிறது. 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் தன்னிறைவு பெற்றதாக மாறும் வகையில் பள்ளி மேலாண்மைக்குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவின் மூலம் பள்ளிகளின் அடிப்படைத் தேவைகள் தலைமை ஆசிரியர் வாயிலாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது. குழந்தைகள் வீட்டிற்கு வந்ததும் என்ன செய்கிறார்கள் என கவனித்தாலே போதுமானது.



குழந்தையின் பெற்றோராக இல்லாமல் நண்பராக கலந்துரையாட வேண்டும். அதட்டுதல், கடினமான சொற்களை பெற்றோர் பயன்படுத்தக் கூடாது. குழந்தையிடம் எந்த ஒரு மாற்றம் தெரிந்தாலும் ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். குழந்தைகளின் மன நிலை கொரோனாவிற்கு பின்னர் பெரிய அளவில் மாறிவிட்டது. குழந்தைகளின் மனநிலையில் மாற்றம் தெரிந்தால் உடனடியாக வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியரிடம் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றார். ஆசிரியர்களை உறவினர் போல கருதி பேச வேண்டும். பள்ளிகளுக்கு குறை சொல்ல மட்டுமே வரக்கூடாது. பெற்றோரும் ஆசிரியரும் இணைந்து செயல்பட்டால் மாணவ-மாணவியர் முன்னேற்றம் நிச்சயமாக இருக்கும். குழந்தைகளை எந்தக் காலத்திலும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது. ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறமை இருக்கும். ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவது ஆசிரியர் மற்றும் பெற்றோரின் கடமையாகும். ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றை திணிப்பது கல்வியல்ல. குழந்தைகளின் அறிவை வளர்த்தெடுக்கிற, வார்த்தெடுக்கிற மிகப்பெரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கிறது. குழந்தைகளிடம் இருக்கும் திறமையை ஆசிரியர்கள் கண்டறிந்து சொல்லும்போது பெற்றோர் அதனை ஊக்குவிக்க வேண்டும். பள்ளிக்கூடம் அரசுக்கு சொந்தமானது மட்டுமல்ல. நம் குழந்தைகளின் கல்விக்கூடம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானம் உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது. மாதந்தோறும் கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் பள்ளிகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.



முன்னாள் மாணவர்களையும் இக்குழுவில் சேர்க்கப்பட்டு வருகிறது. பள்ளியின் வளர்ச்சிக்குத் தேவையான பொறுப்புணர்வோடு, பள்ளி மேலாண்மைக்குழு செயல்பட வேண்டும் என்று மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.


இதனையடுத்து பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பயன்பாடு இல்லாத கட்டடங்களை மறுசீரமைப்பு அல்லது அரசின் அனுமதி பெற்று இடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர் உடன் இருந்தார்.