எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கான தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்த்துவது பற்றி, அக்டோபர் 10-ம் தேதி நிதியமைச்சருடன் ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 


"நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைக்கும் வரை, நீட் தேர்வுக்கான பயிற்சி தொடரும். உயர் தர ஆய்வககங்கள் மூலமாக பயிற்சி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த மாநில மக்களும் நீட் சட்ட விலக்குக்காகக் காத்திருக்கின்றனர். 


2,381 பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கான தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளோம். அக்டோபர்  10-ம் தேதி நிதியமைச்சருடன் பள்ளிக் கல்வித்துறை சந்திப்பு நடக்க உள்ளது. அன்று தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்துவது பற்றி, ஆலோசனை நடத்த உள்ளோம். பின்னர் உரிய முடிவு எடுக்கப்படும். 


 






போதைப் பொருள் பயன்பாடு குறித்து சமூக நலத்துறை, காவல் துறை, தனியார் அறக்கட்டளைகளுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களிடையே போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்ட காவல் துறையிடமும் வலியுறுத்தி வருகிறோம். அதன் ஒரு கட்டமாக சிற்பி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் இல்லாத வளாகமாக பள்ளிகள் மாற்றப்படும். இதுகுறித்து ஆட்சியர்களிடம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.


அரசுப் பள்ளிகளில் தொழில் கல்வி பாடப் பிரிவுகள் மூடப்படுகிறது என்பது பொய்ப் பிரச்சாரம் ஆகும். இதில் உண்மையில்லை. பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தொழிற்கல்வி வகுப்புகள் நடந்து வருகின்றன. பல்வேறு பள்ளிகளில் தொழில் கல்வி குறித்த பாடப் பிரிவுகளுக்கான வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன."


இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். 


அங்கன்வாடி மையங்களில், எல்கேஜி, யுகேஜி ஆகிய மழலையர் வகுப்புகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய, அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.


தொடக்கக் கல்வியில் டிப்ளமோ முடித்தவர்களை பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக நியமனம் செய்துகொள்ளவும் அவர்களுக்கு 11 மாதங்களுக்கு மட்டும் வேலை அளிக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.