காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!

எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா?

Continues below advertisement

1960களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன வகையில் நியாயம் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Continues below advertisement

முன்னதாக, புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசு நிதி வழங்கும் என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகக் கூறி இருந்தார். இதற்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், மத்திய அரசின் blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாகச் சாடி இருந்தார்.

ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா? மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!

"மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்’’ என்று பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, ’’முதலமைச்சர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் மகன், மகள் அல்லது பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில், மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா?

அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை?

தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சிபிஎஸ்இ மும்மொழி பாடத்திட்டமே இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை?

பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்? தற்போது 2025 ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது.

இன்னும், உங்கள் 1960களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்?’’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Continues below advertisement