புவனகிரி அரசுப்பள்ளி ஆசிரியர் கார்த்திக் ராஜாவுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டுத் தெரிவித்து, கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பொது முடக்கத்தின்போது ஆன்லைன் கல்வி ரேடியோ மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் - கற்பித்தல் பயிற்சியை வழங்கியதற்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்துத் தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய பாராட்டுக் கடிதத்தில், ''இக்கட்டான கொரோனா தொற்று நோய்க்‌ காலத்தில்‌ கல்வி கற்கக் கூடிய சூழ்நிலையில்‌ இல்லாத மாணவ, மாணவிகளுக்கு கடலூர்‌ மாவட்டம்‌ புவனகிரி ஒன்றிய ஆசிரியர்‌ கார்த்திக் ராஜா கல்வி ரேடியோ எனும்‌ இணையதளத்தை உருவாக்கினார். அதில்‌ ஆர்வமுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஒன்றாக இனைத்து ஓராண்டிற்கும்‌ மேலாக ஆன்லைன்‌ மூலம்‌ கேட்டுக் கொண்டே கற்பதற்கும்‌, எழுதுவதற்கும்‌ ஏற்பாடு செய்து தொடர்ந்து கல்விப்‌ பணியாற்றி வரும்‌ அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. 


இந்த ஆன்லைன்‌ கல்வி ரேடியோ இணையதளம்‌ மேலும்‌ பல ஆண்டுகள்‌ தொடர்ந்து கல்வி, கற்பித்தலில்‌ இன்னும்‌ பல புதுமைகளைப் புகுத்திடவும்‌ மாணவ, மாணவிகளின்‌ கல்வித்‌ திறனை வளர்க்கவும்‌, சிறப்பாகச் செயல்படவும்‌ ஆன்லைன்‌ கல்வி ரேடியோ குழு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்‌ கொள்கிறேன்''‌ என்று தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். 




இதுகுறித்து ஏபிபி நாடுவிடம் பேசிய ஆசிரியர் கார்த்திக் ராஜா, ''உண்மையிலேயெ இது மிகப்பெரிய அங்கீகாரம். ஆன்லைன் கல்வி ரேடியோவின் சிறப்பு அம்சமே கேட்டு, எழுதுவதுதான். அதைக் குறிப்பிட்டு தலைமைச் செயலர் இறையன்பு அருமையாக எழுதி இருக்கிறார். கூட்டு முயற்சியின் விளைவுதான் இது. 


கல்விக்கு என ஸ்மார்ட் போன்களை மாணவர்களுக்குக் கொடுப்பதன் மூலம் ஏற்படும் பல்வேறு எதிர்மறை விளைவுகளைக் கண்கூடாகவே பார்த்து வருகிறோம். இதுவே கேட்டலை மையப்படுத்தி, கற்பித்தல் நிகழ்த்தப்படும்போது மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பாதுகாப்பான கல்வியைக் கொடுக்க முடியும். 


ஆன்லைன் கல்வி ரேடியோவைப் பயன்படுத்த எந்தக் கட்டணமும் இல்லை. விளம்பரங்கள் எதுவும் வெளியாவதில்லை. தன்னலமற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வக் கூட்டு முயற்சியே இது'' என்று ஆசிரியர் கார்த்திக் ராஜா தெரிவித்தார். 




சாதாரண செல்பேசியில், மிகக்குறைந்த இணைய அலைவரிசை கிடைத்தால்கூட இயங்கும் வகையில் ஆன்லைன் கல்வி ரேடியோவைத் தொடங்கி அதன் மூலம் மாநிலம் முழுவதும் கற்பித்தலை நிகழ்த்தி சாதனை படைத்து வருகிறார் கடலூர் மாவட்டம், கத்தாழை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஆ.கார்த்திக் ராஜா. 


இந்த ரேடியோவில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களும் தினந்தோறும் சுழற்சி முறையில் ஒலிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது. 


கல்வி ரேடியோ பக்கத்தைக் காண: www.kalviradio.com