தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாநிலக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான சமர்ச்சீர் பாடப் புத்தகங்களை எஸ்சிஇஆர்டி எனப்படும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரிக்கிறது. இவற்றை, தமிழக பாடநூல் கழகம் அச்சிட்டு, பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. அதன்படி ஆண்டுக்கு சுமார் 7 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன.


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நூல்கள்


இந்த நூல்கள் அனைத்தும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி உள்ளிட்ட போட்டித் தேர்வர்களுக்குப் பாட நூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.


பாடப் புத்தகங்களின் விலை உயர்வு


இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.40 முதல் ரூ.90 வரை இந்த விலை உயர்வு உள்ளது. 390 ரூபாயாக இருந்த 1ஆம் வகுப்பு பாட நூலின் விலை, 550 ரூபாயாக அதிகரித்துள்ளது. 380 ரூபாயாக இருந்த 2ஆம் வகுப்பு பாட நூலின் விலை, 530 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல, 430 ரூபாயாக இருந்த 3ஆம் வகுப்பு பாட நூலின் விலை, 620 ரூபாயாக அதிகரித்துள்ளது.


470 ரூபாயாக இருந்த 4ஆம் வகுப்பு பாட நூலின் விலை, 650 ரூபாயாகவும் 510 ரூபாயாக இருந்த 5ஆம் வகுப்பு பாட நூலின் விலை, 710 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.


ரூ.1200 ஆக உயர்வு


790 ரூபாயாக இருந்த 6ஆம் வகுப்பு பாட நூலின் விலை, 1110 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக 1200 ரூபாயாக இருந்த 7ஆம் வகுப்பு பாட நூலின் விலை, 860 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல 690 ரூபாயாக இருந்த 8ஆம் வகுப்பு பாட நூலின் விலை, 1000 ரூபாயாக அதிகரித்துள்ளது. 9ஆம் வகுப்புப் புத்தகத்தின் விலை 1,110 ரூபாயாகவும் 10ஆம் வகுப்பு புத்தக விலை ரூ.1130 ஆகவும் உயர்ந்துள்ளது.


எதிர்க் கட்சித் தலைவர்கள் கண்டனம்


இந்த விலை அதிகரிப்புக்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.


இந்த சூழலில், காகிதங்களின் விலை உயர்வு உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக பாடநூல் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.




என்ன காரணம்?


பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்போதைய உற்பத்தி செலவை அடிப்படையாகக் கொண்டு பாடப் புத்தகங்களின் விற்பனை விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடைசியாக தமிழகத்தில் 2018ஆம் கல்வியாண்டில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டபோது விலை திருத்தியமைக்கப்பட்டது.


தற்போது பாடப் புத்தகங்களின் உற்பத்தி செலவு ( தாள், மேல் அட்டை, அச்சு ஊதியம்)கணிசமாக அதிகரித்துள்ளதால், விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக பாடநூல் கழக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதே நேரத்தில் அரசு, அரசு உதவி பள்ளிகளின் மாணவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.