பள்ளி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில்‌ உள்ள 5 வயதுடைய அனைத்து குழந்தைகளைக்‌ கண்டறிந்து அவர்களை அரசுப்‌பள்ளிகளில்‌ சேர்க்க வீடுதோறும்‌ நேரடியாகச் சென்று உடனடி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்‌ என்று தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தொடக்கக்‌ கல்வி இயக்கக நிர்வாகத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 2022- 23ஆம்‌ கல்வியாண்டில்‌ மாணவர்‌ சேர்க்கைக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். 


அதில் கூறப்பட்டுள்ளதாவது:


'' * அங்கன்வாடியில்‌ பயிலும்‌ குழந்தைகளில்‌ 5 வயதுடைய குழந்தைகளைக்‌ கண்டறிந்து அவர்களை அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌.


* பள்ளி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில்‌ உள்ள அனைத்து 5 வயதுடைய குழந்தைகளைக்‌ கண்டறிந்து அவர்களை அரசுப்‌பள்ளிகளில்‌ சேர்க்க வீடுதோறும்‌ நேரடியாகச் சென்று உடனடி சேர்க்கையை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌.


பள்ளியை சுற்றியுள்ள குடியிருப்புகளில்‌ 5+ வயதுடைய குழந்தைகளைக்‌ கண்டறிந்து அவர்களை உடனடியாக அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌.


* இடைநின்ற மாணவர்களைக்‌ கண்டறிந்து அவர்களை அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌.


* பள்ளி அமைந்திருக்கும்‌ குடியிருப்புப் பகுதிகளில்‌ உள்ள 5+ மாணவர்களை 100% அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்ப்பது தலைமை ஆசிரியர்‌ மற்றும்‌ உதவி ஆசிரியரின்‌ தலையாயக் கடமையாகும்‌.


* பள்ளியின்‌ சாதனைகள்‌, வளர்ச்சி, பல்வேறு வகையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள்‌, கல்விமுறை, பாதுகாப்பு குறித்து  பெற்றோர்‌ ஆசிரியர்‌ கூட்டம்‌ மற்றும்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்டத்தின்‌ வாயிலாக பெற்றோர்களிடம்‌ எடுத்து கூறலாம்‌.


* பள்ளிகளில்‌ உள்ள திறன்‌ வகுப்பறைகளின்‌ (Smart Class) செயல்பாடுகள்‌ பற்றியும்‌ விரைவுத்‌ துலங்கல்‌ குறியீடு (QR Code) வழியாக பாடக்‌ கருத்துகள்‌ எளிமையாக்கப்பட்டு கற்றல்‌ செயல்பாடு நடைபெறுகின்றது என்பதைப்‌ பற்றியும்‌ பெற்றோர்களுக்கு விரிவாக எடுத்துக்‌ கூற வேண்டும்‌.


* தனியார்‌ பள்ளிகளுக்கு நிகரான இணைய வழிப் பாட கற்பித்தல்‌ பற்றியும்‌ வாட்ஸப் வழியாகவும் ஆசிரியர்‌ மாணவர்‌ பாடப் பரிமாற்றங்கள்‌ பற்றியும்‌ பெற்றோர்களுக்கு விரிவாகவும்‌ தெளிவாகவும்‌ தெரிவித்தல்‌ வேண்டும்‌.


* மாணவர்கள்‌ சேர்க்கை பற்றி சமூக வலைதளங்களில்‌ ஆடியோ / வீடியோ பதிவுகள்‌ இடம்‌ பெறச்‌ செய்யலாம்‌.


* பள்ளியில்‌ சேரும்‌ குழந்தைகளுக்கு ஊக்கப்‌ பரிசு வழங்குவதன்‌மூலம்‌ மாணவர்‌ சேர்க்கையை மேலும்‌ அதிகரிக்கலாம்‌.





பள்ளி மேலாண்மைக்‌ குழு


* பள்ளி அமைந்துள்ள குடியிருப்புப்‌ பகுதிகளை பிரித்துக்‌ கொண்டு, ஒவ்வாரு குடியிருப்பில்‌ உள்ள பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்கள்‌ ஆசிரியர்களோடு இணைந்து அப்பகுதியில்‌ உள்ள பள்ளி வயது குழந்தைகளின்‌ பெற்றோர்களிடம்‌ பள்ளியின்‌ சிறப்புகளை எடுத்துக்கூறி மாணவர்‌ சேர்க்கைக்கு உதவுதல்‌


* பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்கள்‌ தங்களது குழந்தைகளின்‌ சிறப்பான செயல்பாடுகளை அப்பகுதியில்‌ உள்ள பள்ளி வயதுக் குழந்தைகளின்‌ பெற்றோர்களிடம்‌ நேரடியாக உரையாடச் செய்து அதன்‌ மூலம்‌ மாணவர்‌ சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்தல்‌.


* பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களுக்கு மேலாண்மைக் குழுவில்‌ உள்ள உறுப்பினர்கள்‌ குழந்தைகளின்‌ பெற்றோர்களை வரவழைத்து பள்ளி தொடர்பான புகைப்படங்கள்‌ மற்றும்‌ காணொளிகளை திரையிட்டு அரசு வழங்கும்‌ நலத்திட்டங்களை எடுத்துக்கூறி அதன்‌ மூலம்‌ மாணவர்‌ சேர்க்கை நடத்துதல்‌.


* பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்களான தலைமை ஆசிரியர்‌, ஆசிரிர்கள்‌, பெற்றோர்கள்‌ உள்ளாட்சி பிரதிநிதிகள்‌, இல்லம்‌ தேடிக்‌ கல்வி தன்னார்வலர்‌ ஆகியோர்‌ ஒன்றிணைந்து குழுவாக செயல்பட்டு பள்ளியில்‌ மாணவர்‌ சேர்க்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள்‌ பற்றி கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகள்‌ எடுக்கலாம்‌.


பள்ளி மேலாண்மைக்‌ குழுவின்‌ பங்கு 


* ஆசிரியர்கள்‌ எவ்வளவு தான்‌ பள்ளி பற்றிய சிறப்புகளைப் பொதுவெளியில்‌ எடுத்துக்‌ கூறினாலும்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்கள்‌ தாங்கள்‌ வசிக்கும்‌ இடத்தில்‌ உள்ள சக பெற்றோர்களிடத்தில்‌ பள்ளி பற்றி கலந்துரையாடும்‌போது அவர்களால்‌ அதிக தாக்கத்தினை ஏற்படுத்திட முடியும்‌.


* பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்‌ அனைவரும்‌ ஒன்று சேர்ந்து வீடு வீடாக சென்று அரசுப்‌ பள்ளியின்‌ சாதனைகள்‌, கட்டமைப்பு வசதிகள்‌, நலத்திட்டங்கள்‌ கல்வி உதவி தொகைகள்‌ பற்றிப் பெற்றோரிடம்‌ நோடியாக எடுத்துக்‌ கூற வேண்டும்‌.


* பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்கள்‌ மாணவர்‌ சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள்‌ எடுத்துச் செல்லலாம்‌ மற்றும்‌ துண்டுப் பிரசுரங்கள்‌ வழங்கலாம்‌.


* நம்‌ பள்ளி நம்‌ பெருமை வலைதள செயலியை பொது மக்களிடம்‌ எடுத்துக் கூறி அதன்‌ தனித்துவம்‌ சார்ந்து விளக்குவதன்‌ மூலம்‌ மாணவர்‌ சேர்க்கையை அதிகரிக்கலாம்‌.


* பள்ளியில்‌ சேரும்‌ மாணவர்களுக்கு பள்ளி மேலாண்மைக்‌ குழுவின்‌ சார்பில்‌ பரிசுகள்‌ வழங்கி ஊக்கப்படுத்தலாம்‌.


இல்லம்‌ தேடிக்‌ கல்வி தன்னார்வலர்கள்‌ பங்கு


* தன்னார்வலர்கள்‌ தங்களது குடியிருப்பில்‌ உள்ள பள்ளி வயதுக்‌ குழந்தைகள்‌ அனைவரும்‌ பள்ளியில்‌ சேர்ந்துள்ள விவரத்தை உறுதிப்படுத்துதல்‌


* பள்ளி செல்லாக்‌ குழந்தைகள்‌ தங்கள்‌ குடியிருப்புப்‌ பகுதியில்‌ இருப்பின்‌ அதிக கவனம்‌ செலுத்திட வேண்டும்‌.


* தன்னார்வலர்கள்‌ வசித்து வரும்‌ குடியிருப்புப்‌ பகுதியில்‌ புதிதாக பள்ளி வயது குழந்தைகள்‌ உள்ள குடும்பம்‌ குடிபெயர்ந்து வந்திருந்தால்‌ தலைமை ஆசிரியருக்கு தகவல்‌ தெரிவித்துப் பள்ளியில்‌ சேர்த்திட நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌.


* இல்லம்‌ தேடிக்‌ கல்வி தன்னார்வலர்கள்‌ வீடு வீடாகச் சென்று கண்டறிந்த 5+ குழந்தைகளை அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்க்க உதவிட வேண்டும்‌.


மேற்கண்ட வழிமுறைகளைப்‌ பின்பற்றி 2022-23ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்''‌.


இவ்வாறு தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.