இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு டிசம்பர் 17ஆம் தேதி அன்று சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


இதுகுறித்து இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் பொறுப்பாளரும் ஐஏஎஸ் அதிகாரியுமான இளம் பகவத், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


அதில் கூறி இருப்பதாவது: 


’’கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் கற்றல் இடைவெளி / இழப்பை ஈடுசெய்ய அரசு முடிவெடுத்தது. இதற்காக இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின்கீழ் பயிற்சி மையங்கள் 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு தினமும் மாலையில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒன்றில் இருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். 


அனைத்து குழந்தைகளும் கல்வியில் அடிப்படையான எண்ணறிவும், எழுத்தறிவும் பெற்றிருக்க வேண்டும். இதைக் கருத்தில்கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டத்துக்கு உறுதுணை புரியும் வகையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையான மாணவர்களில் சிறப்பு கவனம் தேவைப்படுவோர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு இல்லம் தேடிக் கல்வி மையங்களில் தனிப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


ஏற்கெனவே நவம்பர்‌ மாதத்தில்‌ பயிற்சி அளிக்கப்பட்டது. அப்பயிற்சியினை தொடர்ந்து தற்பொழுது டிசம்பர்‌
மாதத்தில்‌ தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு ஒரு நாள்‌ பயிற்சி குறுவள மைய அளவில்‌ அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.




இப்பயிற்சிக்கு ஒவ்வொரு குறுவள மையத்திற்கும்‌ நன்கு அனுபவமுள்ள ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ என இருவர்‌ கருத்தாளர்களாக செயல்பட வேண்டும்‌. இவர்களுக்கு வட்டார ஆசிரியர்‌ ஒருங்கிணைப்பாளர்கள்‌ 15.12.22 அன்று பயிற்சி அளிக்க வேண்டும்‌. அதன்‌ பின்‌ தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு பயிற்சி 17.12.22 அன்று குறுவளமைய அளவில்‌ பயிற்சி சிறப்பாக நடத்தப்பட வேண்டும்‌.


இதற்கான கட்டகம்‌ மாநில கல்வியியல்‌ ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்‌ மூலம்‌ உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டங்கள்‌ உடனடியாகத் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட வேண்டும்‌ என்பதை கருத்தில்‌ கொண்டு மாவட்டங்களிலேயே Tamil Nadu Transparency Act வழிமுறைகளை பின்பற்றி தொடக்க நிலை இல்லம்‌ தேடிக்‌ கல்வி மையங்கள்‌ எண்ணிக்கைக்கேற்ப அச்சுப் பிரதி எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.


மேலும்‌ மாணவர்களின்‌ கற்றல்‌ அடைவு நிலையினை அறியும்‌ வண்ணம்‌ பாடவாரியாக அடைவுத்‌ திறன்‌ அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது’’.


இவ்வாறு இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் பொறுப்பாளரும் ஐஏஎஸ் அதிகாரியுமான இளம் பகவத் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவித்துள்ளார்.