தர்மபுரி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் 2514 மையங்களில் தொடக்கப்பட்டுள்ளது. இதில் பாடம் கற்பிக்கும் 2514 தன்னார்வலர்களுக்கு வட்டார அளவிலான பயிற்சி முகாம் பத்து ஒன்றியங்களில் நடந்தது.


கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்புகளை ஈடு செய்வதற்காக தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை குறைத்தீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வி எனும் தொலைநோக்கு திட்டத்தை தமிழக முதல்வர் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார்.


தர்மபுரி மாவட்டத்தில் 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் இல்லம் தேடி கல்வி 2514 மையங்களில் கடந்த இரண்டாம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இதில் 2514 தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் உள்ள 2514 தன்னார்வலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.



தர்மபுரி ஒன்றியத்தில் உள்ள 115 தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் சிறப்பாக செயலாற்றிய 311 தன்னார்வலர்களைக் கொண்டு நடப்பாண்டு ஜூலை இரண்டாம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி மையங்களை மாவட்ட முதன்மை கல்வி ஜோதி சந்திரா தொடங்கி வைத்தார்.


பணியாற்றும் தன்னார்வலர்களுக்கான சிறப்பு பயிற்சி நேற்று முன்தினம் இரண்டு கட்டங்களாக ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. முகாமை தர்மபுரி வட்டார வள மைய மேற்பார்வையாளர் முல்லைவேந்தன் தொடங்கி வைத்தார்.


பயிற்சியில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் பாடங்களுக்கான முதல் பருவ கையேடுகளைக் கொண்டு என்னும், எழுத்தும், கற்பித்தல் முறையில் தங்கள் மையத்துக்குட்பட்ட மாணவர்களுக்கு கற்பிக்க பயிற்சிகள் வழங்கப்பட்டது.


தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை பாடல்களை உரக்க படித்தல், வார்த்தை அட்டைகள் வாக்கிய அட்டைகள் குழு செயல்பாடு மற்றும் தனிநபர் செயல்பாடு மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட கற்றல் உத்திகளை கையாளவும் கணிதத்தில் எண்களை அறிதல் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் உள்ளிட்ட அடிப்படை செயல்பாடுகளை கற்பித்து மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.


ஒவ்வொரு அழகு இறுதிலும் ஓஎம்ஆர் தாலை கொண்டு மதிப்பீடு செய்யவும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள் நாகேந்திரன் ஆகியோர் இப்ப பயிற்சியை பார்வையிட்டு தன்னார்வலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.


பயிற்சிக்கான கருத்தாளர்களாக ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் அருண்குமார், முனியப்பன் மோகன் மற்றும் ஆசிரியர் ஜெயராம் ஆகியோர் செயல்பட்டனர்.


 இது குறித்து தர்மபுரி மாவட்ட கல்வித்துறை அதிகாரி கூறுகையில்:- 


கொரோனா தொற்று பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரிசெய்ய இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் இல்லம் தேடி கல்வி மையங்களில் கற்பித்தல் சேவையை மேற்கொள்ளப்படுகிறது.


தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டிற்கான இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் 2514 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 2514 தன்னார்வலர்கள் கல்வி கற்பிக்கின்றனர். இவர்களுக்கான பயிற்சி முகாம் 28 , 29 ஆகிய இரண்டு நாள் நடந்தது. வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் கற்றுத் தரப்படுகிறது என்றார்