கொரோனா கால கற்றல் இழப்பை ஈடுகட்ட இல்லம் தேடிக் கல்வி என்னும் திட்டத்தைத் தமிழக அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதன்படி பள்ளிக்கு வெளியே தன்னார்வலர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இதற்காக ரூ.200 கோடி ரூபாய்  நிதியையும் ஒதுக்கியது. இதற்கு அரசு நவீன குருகுலத்தை அறிமுகம் செய்கிறது என்று விமர்சனங்கள் எழுந்தன.


முதற்கட்டமாகக் காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் இந்த வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலுள்ள மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு முடித்தவர்களும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் பட்டதாரிகளும் கற்றுக் கொடுக்கின்றனர்.




இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இத்திட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், அதன் அமலாக்கம் குறித்து ’ஏபிபி’ செய்தி நிறுவனத்துக்கு இளம்பகவத் விரிவான பேட்டி அளித்தார். 


இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை அரசு கொண்டு வந்ததற்கான காரணம் என்ன?


கொரோனா தொற்றால் 18 மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. மாணவர்கள் ஒரு வகுப்பையே தாண்டி அடுத்த வகுப்புக்கு வந்துவிட்டார்கள். இதனால் மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இழப்பு, கற்றல் இடைவெளி ஆகியவற்றைச் சரிசெய்யவே இல்லம் தேடிக் கல்வித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


அதேபோலப் பெரும்பாலான பள்ளிகளுக்கும் அங்குள்ள சமுதாயத்துக்கும் ஓர் இடைவெளி இருந்துகொண்டே இருக்கிறது. அதைப் பூர்த்தி செய்யவும் இந்தத் தன்னார்வலர்கள் உறுதுணையாக இருப்பார்கள். 


இன்னும் நிறையக் குழந்தைகள் பள்ளிக்கே வருவதில்லை. அவர்களையும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. மாணவர்களின் இடைநிற்றல் விகிதமும் அதிகரித்துள்ளது. இவை அனைத்தையும் சரிசெய்ய சமுதாயத்தின் ஆதரவு தேவைப்படுகிறது. அதற்கு உள்ளூர் நபர்கள் முக்கியம். அவர்களைத் தன்னார்வலர்களாகக் கொண்டு, இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


இதைப் பள்ளி, வகுப்பறைகள், ஆசிரியர்கள் என்ற அமைப்புக்குள்ளேயே மேற்கொள்வதில் என்ன சிக்கல்? செய்ய முடியவில்லையா?


செய்யலாம். ஆனால் கற்றல் இழப்பு மிகவும் அதிகம். பள்ளிகளைத் தாண்டியும் கூடுதல் முன்னெடுப்பு தேவைப்படுகிறது. இதைக் குழந்தைகளே கேட்டிருக்கிறார்கள். 




ஆனாலும் இந்தத் திட்டத்தால் பெற்றோர்கள் பலர், 'காலையில் வேலைக்குப் போய்விட்டு, மாலையில் படி' என்று தங்களின் குழந்தைகளைக் கூறிவிடுவார்கள். பள்ளிக் கல்வி பாதிக்கப்படும் என்று குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறதே?


இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தைத் தொடங்கியே வெறும் 10 நாட்கள்தான் ஆகின்றன. இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. முன்முடிவுகளின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட அனுமானம். இல்லம் தேடிக் கல்வி திட்ட மையங்களுக்கு யாரெல்லாம் வருகிறார்கள், இங்கிருந்து எத்தனை பேர் பள்ளிக்குச் செல்கிறார்கள், செல்லாமல் இருக்கிறார்கள் என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்கப் போகிறோம். 


பள்ளி நேரம் தாண்டி, மீண்டும் தனியாகக் கற்பது குழந்தைகளுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தாதா?


இந்தத் திட்ட மையங்களில் நான் சந்திக்கும் ஒவ்வொரு குழந்தைகளிடமும் நான் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அவர்களின் நான் கேட்பது, ''காலை முதல் பள்ளியில் இருந்துவிட்டு மீண்டும் இங்கு வரவேண்டுமா?, சோர்வாக இல்லையா? வீட்டுக்குச் சென்று டிவி பார்க்கலாம், விளையாடலாமே'' என்றுதான். 


ஆனால் அவர்கள் அனைவரும் சொல்வது, ''சார் இங்கே ஜாலியாக இருக்கிறோம். இங்கு வர மிகவும் பிடித்திருக்கிறது. இங்குதான் சக நண்பர்களுடன் சேர்ந்து பாடுகிறோம், விளையாடுகிறோம். படிக்கவும் முடிகிறது'' என்கின்றனர். 'அக்கா நல்லா சொல்லிக் கொடுக்கறாங்க!' என்கின்றனர். அவர்களின் கண்களில் தெரியும் உண்மையான மகிழ்ச்சியை நீங்கள் வேறெங்கும் காண முடியாது. ஏனெனில் அந்த சூழலை முழுமையாகக் குழந்தைநேய சூழலாக அமைத்திருக்கிறோம். 




இடைநிற்கும் குழந்தைகளை மீட்டெடுக்கத் தன்னார்வலர்களைப் பயன்படுத்திக்கொள்வதாகச் சொன்னீர்கள். இதை ஆசிரியர்களை, பள்ளிகளை வைத்துச் செய்ய முடியாதா?


நிச்சயமாகச் செய்யலாம். ஆசிரியர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களால் 60 முதல் 70 சதவீதம் வரை மாணவர்களை மீட்டெடுக்க முடிகிறது. இதற்கு ஆசிரியர்கள் மட்டுமே காரணமல்ல. அதற்குப் பெற்றோர்களும் பாதுகாவலர்களும் முக்கியக் காரணம்.


இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் மூலம் அந்த இடைவெளியைப் பூர்த்தி செய்ய முயற்சி செய்கிறோம். வீட்டின் அருகிலேயே வாழ்வோர் தன்னார்வலராய்ச் சென்று பள்ளிக்குக் குழந்தையைஅனுப்பாதவர்களிடம், ''அக்கா, அண்ணா நீ புள்ளைய ஸ்கூலுக்கு அனுப்பு'' என்பதற்கும் ஆசிரியர்கள் சென்று, ''உங்கள் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புங்கள்'' என்று சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளதல்லவா?


இதற்குத் தேவையான தன்னார்வலர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? 


அவர்களுக்குத் தீவிரமான தேர்வுகள் வைக்கப்படுகின்றன. முதல்கட்டமாகக் கள ஆய்வு, பள்ளி மேலாண்மைக் குழு அனுமதி, ஆன்லைனில் சைக்கோமெட்ரிக் தேர்வு, குழு விவாதம் ஆகியவை நடத்தப்படுகிறது. இவற்றின்மூலம் அவர்களுக்குக் குழந்தைகளைக் கையாளும் திறன் உள்ளதா, கல்வியைக் குறித்த அவர்களின் பார்வை என்ன, பிற்போக்குத்தனமான வழக்கங்களில் ஊறியவர்களா, அரசியலமைப்பின் மாண்பை மதிப்பவர்களா, சமயச் சார்பற்றவர்களா? என்பன உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும். 


அதன் அடிப்படையில், நிறையப் பேர் வடிகட்டப்பட்டு இந்தத் திட்டத்துக்குத் தேவையானோர் தேர்வு செய்யப்படுகின்றனர். அதற்குப் பிறகு அவர்களுக்கு சில நாட்கள் பயிற்சி அளித்து, பள்ளிக்கு ஒருநாள் அனுப்பி, கற்றல் செயல்பாடுகளை அறிந்துகொள்ளச் செய்கிறோம். அதற்குப் பிறகே தன்னார்வலர்கள் வகுப்பெடுக்கத் தொடங்குவர்.


இவ்வளவு வடிகட்டல்களுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்படும் தன்னார்வலர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறதே?


இது அவர்கள் பணிக்கான ஊதியம் கிடையாது. தன்னார்வமிக்க பணிக்குக் கொடுக்கும் பரிசு. எம்.எட்., எம்.பில்., பி.எச்டி. படித்தவர்கள் எல்லாம் இதில் இணைந்திருக்கிறார்கள். நிறையக் கொடுத்தால் நல்ல தன்னார்வலர்கள் வருவார்களா இல்லை எதுவுமே கொடுக்கவில்லை என்றால்தான் நல்ல தன்னார்வலர்கள் கிடைப்பார்களா என்று எங்களுக்குள் விவாதம் நடந்தது. இதில் பெரும்பாலானோர் சொன்னது, எந்தத் தொகையும் கொடுக்காவிட்டால் தன்னார்வம் மிக்கவர்கள் கிடைப்பார்கள் என்பதுதான். எனினும் அவர்களின் போக்குவரத்துச் செலவு, மொபைல் ரீசார்ஜ், பேனா, பென்சில், ஸ்கெட்ச் வாங்கல் உள்ளிட்ட கைச்செலவுகளுக்கு ஒரு சிறிய தொகையை அளிக்கிறோம். அவ்வளவுதான். 




கிராமங்களில் சாதியக் கட்டுமானம் பலமாக உள்ள பகுதிகளில், தன்னார்வலர்களை எப்படித் தெரிவு செய்கிறீர்கள்?


பொதுவாக கிராமங்களில் ஒரு குடியிருப்பு என்பது சமூக அடிப்படையில் ஒன்றாகத்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதே குடியிருப்பை சேர்ந்த அதே நபர்கள்தான் தன்னார்வலர்களாகப் பணியாற்றுகின்றனர். குறிப்பாக, மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய, தகுதி வாய்ந்த தன்னார்வலர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறோம். பெரும்பான்மையான பகுதிகளில் இதைப் பின்பற்றுகிறோம். வெகு சில இடங்களில் மட்டும் தகுந்த தன்னார்வலர்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். 


இல்லம் தேடிக் கல்வித் திட்டத்துக்கான பாடத்திட்டம் எவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ளது?


எஸ்சிஇஆர்டி மூலம் பாடத்திட்டக் கையேட்டை உருவாக்கி உள்ளோம். எல்லா விதமான பாடங்களையும் செயல்வழிக் கற்றல் வகையில், புதிர்கள், பாடல்கள், விடுகதைகள், விளையாட்டுகள் மூலம் கற்பிக்கிறோம்.


இதற்குப் பள்ளிக்கு வெளியே இடம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? அங்கு மாணவர்களுக்கான பாதுகாப்பை எப்படி உறுதி செய்கிறீர்கள்?


பள்ளியில் 7, 8 மணி நேரம் இருந்த மாணவன், வெளியே சென்று கற்பதால் மனதளவிலும் உடலளவிலும் புத்துணர்ச்சி கிடைக்கும். மாணவர் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்கிறோம். 


திறந்தவெளியில்தான் கற்றல்- கற்பித்தல் நிகழ்த்தப்படுகிறது. பெற்றோர்களும் பள்ளி மேலாண்மைக் குழுக்களும் இதைக் கண்காணிக்கலாம். 99 சதவீதத் தன்னார்வலர்கள் பெண்கள் என்பதால் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு விடுகிறது. பெண் தன்னார்வலர்கள் கிடைக்காத சூழலில் மட்டுமே ஆண்களைத் தேர்வு செய்கிறோம். குழந்தைகளை சரியாகவும் மென்மையாகவும் கையாள வேண்டும் என்பதைத் தெளிவுறத் தன்னார்வலர்களிடம் தெரிவித்துவிடுகிறோம்.  


ஊரடங்கு காலத்திலேயே இந்தத் திட்டத்தைத் தொடங்கி இருக்கலாமே? பள்ளிகள் திறக்கப்பட்டபிறகு தொடங்கியது ஏன்?


அப்போது நான் பொறுப்பில் இல்லாததால், அதுபற்றிக் கருத்துத் தெரிவிக்க முடியாது. 


தேசியக் கல்விக் கொள்கையின் நீட்சியாக இந்தத் திட்டம் இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறதே?


இது நிச்சயம் தவறான தகவல். இதற்கும் தேசியக் கல்விக் கொள்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இது மாநில அரசின் முழுமையான திட்டம். மாநில அரசால் அறிவிக்கப்பட்டு, 100 சதவீதம் மாநில அரசே நிதியளிக்கும் திட்டம். இதற்கும் வேறு எதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 


இவ்வாறு இளம்பகவத் ஐஏஎஸ் தெரிவித்தார்.


-க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramanip@abpnetwork.com