விளையாட்டில் சிறந்து விளங்கும் திறமையான மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு துறைக்கு தலா 2 இடங்கள் வீதம் ஒதுக்கப்படுகின்றன. இதில் குறைந்தபட்சம் 1 இடம் மாணவிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-25 கல்வியாண்டில் இருந்து விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கை (Sports Excellence Admission – SEA) தொடங்கப்பட்டுள்ளது.


விளையாட்டில் சிறந்து விளங்கும் திறமையான மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வெகுமதி அளிப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் தகுதியான மாணவர்களை தங்களது விளையாட்டுகளில் தொடர்ந்து நீடிக்கச் செய்வதுடன், உயர் கல்வியைத் தொடரவும் ஊக்குவிக்கிறது.


ஜேஇஇ (அட்வான்ஸ்டு) தகுதி அவசியம்


விளையாட்டு வீரர்களுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளுக்கு எந்தவொரு மாணவரும் ஜேஇஇ (அட்வான்ஸ்டு) தகுதி பெற்றிருக்க வேண்டும். இருப்பினும் கூட்டு இடஒதுக்கீடு ஆணையம் (JoSAA) மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறாது. மாறாக ஐஐடி மெட்ராஸ் இதற்கான தனி இணைய முகப்பைத் தொடங்கி உள்ளது.


இதுகுறித்து ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், இளைஞர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், ஒழுக்கமான வாழ்க்கையையும் மட்டுமல்ல, வெற்றி தோல்விகளைக் கையாளும் மன முதிர்ச்சியையும், விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் தோல்விகளை வெற்றியாக மாற்றுவதையும் விளையாட்டு கற்றுக்கொடுக்கிறது. இதுபோன்ற தரத்துடன் எங்கள் வளாகத்தில் இளைஞர்கள் இருப்பதையும், மற்ற குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக திகழ்வதையும் விளையாட்டு ஒதுக்கீடு உறுதி செய்யும்” என்றார்.


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


ஜேஇஇ (அட்வான்ஸ்டு) பொதுத் தரவரிசைப் பட்டியல் (CRL) அல்லது பிரிவு வாரியான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதுடன், கடந்த நான்காண்டுகளில் நடைபெற்ற தேசிய/ சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஏதேனும் ஒரு பதக்கத்தையாவது வென்றவர்கள் விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். மாணவர்கள் ஜூன் 15ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். https://jeeadv.iitm.ac.in/sea/information.html என்ற இணைப்பு மூலம் கூடுதல் தகவல்களை அறியலாம்.


குறிப்பிட்ட விளையாட்டுகளைக் கொண்ட பட்டியலில் விண்ணப்பதாரர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தனி விளையாட்டுத் தரவரிசைப் பட்டியல் (SRL) தயாரிக்கப்படும். இந்தப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கைக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.


அதிநவீன விளையாட்டு உள்கட்டமைப்புகள்


விளையாட்டு தொடர்பான பல விருப்பப் பாடங்களை ஐஐடி மெட்ராஸ் சேர்த்துள்ளது. அதுமட்டுமின்றி ஆராய்ச்சி வசதிகளுடன கூடிய அதிநவீன விளையாட்டு உள்கட்டமைப்புகளையும் கொண்டிருக்கிறது. உயர்தர விளையாட்டு அறிவியல் மற்றும் கல்விப் படிப்புகளை வழங்கும் உயர்தர விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்பு மையம் (Center of Excellence in Sports Science and Analytics - CESSA). பல்வேறு உத்திசார் ஒத்துழைப்புகள் மூலம் மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களை இலக்காகக் கொண்டு விளையாட்டு பயிற்சி தயாரிப்புகளை உருவாக்குகிறது என்று ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.


கூடுதல் தகவல்களுக்கு: https://jeeadv.iitm.ac.in/sea