ஐஐடி சென்னை ஆராய்ச்சியாளர்கள், மனிதக் கண்களில் செலுத்தப்படும் மருந்துகளை, ‘லேசர் மூலம் உருவாக்கப்படும் லேசான வெப்பச் சலனம்’ மூலம், குறிப்பிட்ட பகுதிக்கு சிறந்த முறையில் அனுப்பிவைக்க முடியும் என நிரூபித்துள்ளனர். எந்த அளவுக்கு வெப்பம் மற்றும் நிறை பரிமாற்றம் நிகழ்கிறது என்பதைக் கண்டறிய, மனிதக் கண்ணின் பல்வேறு சிகிச்சை முறைகளின் செயல்திறனை கணினித் தொழில்நுட்ப தரவுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்தனர்.
இந்தியாவில் சுமார் 1.1 கோடி நபர்கள் விழித்திரை கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கண் நோய்களுக்கான லேசர் அடிப்படையிலான சிகிச்சையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில், உள்நாட்டிலேயே மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் அமைந்துள்ளன.
விழித்திரை கிழிதல் (retinal tears), நீரிழிவு விழித்திரை நோய் (diabetic retinography), விழித்திரையில் வீக்கம் (macular oedema), விழித்திரை நரம்பு அடைப்பு (retinal vein occlusion) போன்ற நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க, லேசர் அடிப்படையிலான விழித்திரை சிகிச்சைகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகினறன. விழித்திரை என்பது இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளைக் கொண்ட கண்களின் ஒரு பகுதி என்பதால், இதுபோன்ற சிகிச்சை முறைகளை மிக கவனமாகவும் துல்லியமாகவும் கையாளுதல் அவசியமாகும்.
இணைந்த ஐஐடி சென்னை - சங்கர நேத்ராலயா
ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறையின் பேராசிரியர் அருண் நரசிம்மன், சங்கர நேத்ராலயாவைச் சேர்ந்த டாக்டர் லிங்கம் கோபால் ஆகியோர் இணைந்து, லேசர் கதிர் வீச்சால் விழித்திரையில் ஏற்படும் விளைவுகளைக் கண்டறிய, இந்தியாவிலேயே முதன்முறையாக பயோதெர்மல் ஆராய்ச்சியை கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கினர்.
இதன் தொடர்ச்சியாக, உயிரிவெப்பம் மற்றும் நிறை பரிமாற்றத்தைக் கண்டறிந்து, கண் சிகிச்சைக்கான பல்வேறு அம்சங்களைப் பகுப்பாய்வு செய்வதற்காக கணினித் தொழில்நுட்பத் தரவுகளை சேகரித்தல் மற்றும் பரிசோதனை செய்தல் போன்ற பணிகளை இக்குழுவினர் மேற்கொண்டனர்.
பேராசிரியர் அருண் நரசிம்மன், ஐஐடி மெட்ராஸ் பட்டதாரி மாணவர் சீனிவாஸ் விபூத்தே ஆகியோர், கண்ணாடியால் ஆன கண்ணைப் பயன்படுத்தி, இதற்கான ஆய்வை மேற்கொண்டனர். வெப்பத்தால் தூண்டப்பட்ட வெப்பச் சலனம் காரணமாக, கண்ணாடிப் பகுதியில் செலுத்தப்படும் மருந்து, விழித்திரையில் உள்ள இலக்குப் பகுதியை சென்றடைய எடுத்துக் கொள்ளும் கால அளவை எந்த அளவுக்குக் குறைக்கிறது எனக் கண்டறியப்பட்டது.
சமூகப் பிரச்சனைகளுக்கு புதுமையான முறையில் தீர்வு
இத்தகைய ஆராய்ச்சியின் அவசியத்தை எடுத்துரைத்த ஐஐடி இயந்திரப் பொறியியல் துறை பேராசிரியர் அருண் நரசிம்மன் கூறும்போது, “பொறியியல், உயிரியல் போன்ற வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் நிபுணத்துவத்தை பல்துறை ஆய்வுகள் ஒன்றிணைக்கின்றன. இதன் மூலம் தொடர்புடைய சமூகப் பிரச்சனைகளுக்கு புதுமையான முறையில் தீர்வுகாண முடியும்” எனக் குறிப்பிட்டார்.
ஆராய்ச்சியின் தற்போதைய நிலை குறித்தும், இந்த ஆராய்ச்சி எவ்வாறு பயன்பாட்டுப் பொருளாக மாற்றப்படும் என்பது பற்றியும் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் அருண் நரசிம்மன், “எங்களைப் போன்ற பொறியாளர்கள் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடும்போது, நடைமுறை மற்றும் நெறிமுறை சிக்கல்கள் காரணமாக, இயக்கத்தில் உள்ள மனித உறுப்புகள் கிடைப்பது கடினம். அதனால் கணினித் தொழில்நுட்ப தரவுகளைப் பெறவும், ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான பரிசோதனைக்கு கருவிகளை மட்டுமே உபயோகித்து வருகிறோம். கண்ணாடியால் ஆன கண் பரிசோதனைகள், உயிரிவெப்ப மாறுபாடுகளைப் பயன்படுத்தி மனிதக் கண்ணில் ஊடுருவும் சிகிச்சைக்கான பகுப்பாய்வை மேற்கொள்வதன் மூலம், விழித்திரைக்கு மருந்து செலுத்தப்படுவதை மேம்படுத்த முடியும் என நிரூபித்துள்ளோம். மருத்துவ சமூகம் இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று, விழித்திரை நோய்களுக்கான சிகிச்சையில் செயல்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிசுபிசுப்பு குறைந்த உடல்சுரப்பிகளைக் கொண்டு மாற்றம்
விழித்திரை லேசர் அறுவை சிகிச்சை செய்துகொண்ட உள்நோயாளிகளுக்கு, அசல் ஜெல்லுக்கு பதிலாக பிசுபிசுப்பு குறைந்த உடல்சுரப்பிகளைக் கொண்டு மாற்றப்படுகின்றன.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, விழித்திரைக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் பெரும்பாலும் கண்ணாடிப் பகுதியில் நேரடியாக செலுத்தப்படுகின்றன. விழித்திரையை அடைய, திரவத்தின் வழியாக மருந்தை செலுத்தி, இயற்கையாகப் பரவச் செய்வது மெதுவான செயல்முறையாகும், இலக்கை சென்றடைந்து மருந்தால் பயன்கள் விளைய, பல மணிநேரங்கள் முதல் நாட்கள் வரை ஆகக்கூடும்.
கண்ணாடியால் ஆன கண்ணை வடிவியல் ரீதியாக, மனிதக் கண், நீர் மற்றும் சிலிகான் எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தி பரிசோதனை ஒன்றை பேராசிரியர் அருண் நரசிம்மன் வடிவமைத்துள்ளார். அதன்படி, கண்ணின் கண்ணாடிப் பகுதியில் குறிப்பிட்ட புள்ளிகளில் மருந்தைப் பிரதிபலிக்கும் ஒரு சாயத்தை ஆராய்ச்சியாளர்கள் செலுத்தினர். கண்ணாடி திரவத்தை வெப்பப்படுத்தாமல் விழித்திரையின் வெவ்வேறு இடங்களில் செறிவுகளை அளவீடு செய்தனர்.
வெறும் 12 நிமிடங்கள் போதும்
ஆராய்ச்சியின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் மாணவர் கூறும்போது, “இயற்கையான பரவல் மூலமாக விழித்திரையின் இலக்குப் பகுதியில் மருந்து திறம்பட செறிவை அடைவதற்கு 12 மணிநேரம் எடுத்துக் கொண்டது. ஆனால், கண்ணாடி திரவத்தை வெறும் 12 நிமிடங்களில் வெப்பமாக்கியது” என்றார்.
தேவைப்படும் அளவுக்கு சூடுபடுத்தும்போது, கண் திசுக்களை சேதப்படுத்தாது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் மற்றொரு ஆய்வு ஒன்றில் எடுத்துக் காட்டியுள்ளனர்.