ஐஐடி சென்னை ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கக் கூடிய விவசாயக் கழிவுகளை அடிப்படையாகக் கொண்ட பேக்கேஜிங் பொருட்களை உருவாக்கியுள்ளனர்.
பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் விவசாயக் கழிவுகளை அகற்றல் ஆகிய இரு முக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம், சமூகத்திலும் சுற்றுச்சூழலிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆராய்ச்சி அமைந்துள்ளது. இது பேக்கேஜிங்கில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் நுரைகளுக்கு நிலையான மாற்றாக இருக்க முடியம்.
பேக்கேஜிங்கில் தரத்தை வழங்கக் கூடியவை
விவசாய மற்றும் காகிதக் கழிவுகளில் வளர்க்கப்படும் மைசீலியம் அடிப்படையிலான உயிர்ச் சேர்க்கைகள், மக்கும் தன்மை கொண்டவை, பேக்கேஜிங்கில் தரத்தை வழங்கக் கூடியவை என ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.
பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் விவசாயக் கழிவுகளை அகற்றுதல் ஆகிய இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வை வழங்குவதன் மூலம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் இரண்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதற்காக இந்த ஆய்வு?
விவசாயக் கழிவுகளை அதிக வலிமை கொண்ட, மக்கும் பேக்கேஜிங் பொருட்களாக மாற்றுவதன் மூலம் இந்தியாவில் ஆண்டுதோறும் தற்போது உற்பத்தியாகும் 4 மில்லியன் டன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்க நேரடியாக உதவுகிறது.
அதுமட்டுமின்றி ஆண்டுதோறும் உருவாக்கப்படும் 350 மில்லியன் டன் விவசாயக் கழிவுகளைப் பயன்படுத்தவும் முடியும்.
புதுமையான தயாரிப்புகளை உருவாக்கி வணிகமயமாக்குவதற்காக, ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே நேச்சர்வொர்க்ஸ் டெக்னாலஜிஸ் (NatureWrks Technologies) என்ற ஸ்டார்ட்- அப்பை நிறுவியுள்ளனர். இது ஐஐடி சென்னை ஆசிரியரான முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் லட்சுமிநாத் குந்தனாட்டியால் இணைந்து நிறுவப்பட்டது.
ஆராய்ச்சியாளர்கள் நோக்கம்
புதுமையான தயாரிப்புகளை உருவாக்கி வணிகமயமாக்குதல், தொழில்துறை கூட்டாளர்களுடன் இணைந்து தொழில்நுட்பப் பரிமாற்றத்தைத் தொடர்தல் மற்றும் எங்கள் தீர்வுகளை பரவலாக ஏற்றுக்கொள்ள உரிம ஒப்பந்தங்களை ஆராய்தல் ஆகியவற்றிற்காக இது நிறுவப்பட்டுள்ளது. அத்துடன் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், இந்த ஆராய்ச்சி உறுதியான, நேர்மறையான சமூக தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதிசெய்வதையும், அரசாங்க நிதி திட்டங்களைப் பெறுவதையும் ஆராய்ச்சியாளர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
புகழ்பெற்ற, மதிப்பாய்வு செய்யப்பட்ட பயோ ரிசோர்ஸ் டெக்னாலஜி ரிப்போர்ட்ஸ் (https://doi.org/10.1016/j.biteb.2025.102177) ஜூன் 2025 இதழில் இக்கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை ஐஐடி மெட்ராஸைச் சேர்ந்த ஆராய்ச்சி அறிஞர்கள் திருமதி சாண்ட்ரா ரோஸ் பிபி மற்றும் திரு. விவேக் சுரேந்திரன் மற்றும் டாக்டர். லட்சுமிநாத் குந்தனாட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஐஐடி மெட்ராஸின் NFIG (புதிய ஆசிரிய துவக்க மானியம்) மற்றும் இந்திய அரசின் கல்வி அமைச்சகம் இந்த ஆராய்ச்சிக்கு நிதியுதவியை வழங்கி உள்ளன.
என்னென்ன பயன்கள்?
EPS, EPE போன்ற பிளாஸ்டிக் நுரைகளை மைசீலியம் அடிப்படையிலான உயிரிக் கலவைகளாக மாற்றும்போது குப்பைக் கிடங்குகளில் சேரும் கழிவுகளின் அளவு கணிசமாகக் குறையும், நுண் பிளாஸ்டிக் உருவாவதைத் தடுப்பதுடன் பிளாஸ்டிக் உற்பத்திக் கழிவுகள் எரிப்புடன் தொடர்புடைய பசுமைஇல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும்.
விவசாய துணைப் பொருட்களுக்கான தேவையை உருவாக்குவதன் மூலம் கிராமப்புற வளர்ச்சியை இத்தொழில்நுட்பம் ஊக்குவிக்கிறது, விவசாயிகளுக்கும் கிராமப்புற மக்களுக்கும் புதிய வருமானத்துக்கான வழிகளை உருவாக்கும். குறைந்த விலையில் உள்ளூரில் கிடைக்கும் பொருட்களின் பயன்பாடும், கழிவுப் பொருட்களைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் பொருளாதாரமும் இணைந்து செயல்படுவதாக ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.