தான் படித்த ஐஐடி சென்னை கல்லூரிக்குத் தனி ஒருவராக ரூ.110 கோடி நன்கொடை அளித்துள்ளார் டெல்லியைச் சேர்ந்த முன்னாள் மாணவர் சுனில் வாத்வானி.  இந்தப் பணத்தைக் கொண்டு, வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி (Wadhwani School of Data Science & AI) தொடங்கப்பட உள்ளது.


ஐஐடி சென்னையின் சிறந்த முன்னாள் மாணவரான வாத்வானி, ஐகேட், மாஸ்டெக் டிஜிட்டல் ஆகியவற்றின் இணை நிறுவனராவார்.


சுனில் வாத்வானி மற்றும் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி ஆகியோர் இடையே ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் இன்று (30 ஜனவரி 2024) இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


வாத்வானி செயற்கை நுண்ணறிவுப் பள்ளி 


உலகளவில் சிறந்த செயற்கை நுண்ணறிவுப் பள்ளிகளில் ஒன்றாக தரத்தை உயர்த்துவதுடன், தரவு அறிவியல் மற்றும் செயற்கைத் தொழில்நுட்பம் தொடர்பாக அரசின் கொள்கை வகுப்போருக்கு ஆலோசனை வழங்குவதே இதன் நோக்கமாகும்.


இதுகுறித்து ஐஐடி சென்னை இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், ’’நான்காம் தொழிற்புரட்சியில் (Industry 4.0) செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகியவை முக்கிய நகர்வுகள் என்பதால், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியின் தேவை மிகவும் அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு ஐஐடி சென்னை, உயர்தர பள்ளியைத் தொடங்கியுள்ளது.


பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் இணைந்து பணியாற்றுகின்றனர். இந்தப் பள்ளிக்கு ஏறத்தாழ ரூ.110 கோடி தாராள நன்கொடை அளித்ததற்காக சுனில் வாத்வானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மனம்நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனக் குறிப்பிட்டார்.




கல்வி நிறுவனத்திற்குப் பங்களிப்பு


இதுகுறித்து முன்னாள் மாணவரான சுனில் வாத்வானி கூறும்போது, ‘’செயற்கை நுண்ணறிவு மற்றும் சமூகத் தாக்கம் இரண்டுமே எனக்கு முக்கியமானவை. முன்னாள் மாணவர் என்ற முறையில் எனது கல்வி நிறுவனத்திற்குப் பங்களிப்பதை பெருமையாகக் கருதுகிறேன். அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சியில் கவனம் செலுத்தும் பிரத்யேக தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளிக்கான வலுவான தேவை இருப்பதாகக் கருதுகிறேன்.


அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களால் இந்தியா அபரிமிதமான ஆற்றலைப் பெற்றிருப்பதுடன், செயற்கை நுண்ணறிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியலில் உலகத் தலைவராக திகழ முடியும். பெருமைக்குரிய முன்னாள் மாணவராக, ஐஐடி சென்னை எனது வாழ்க்கையில் சிறந்ததொரு இடத்தை வழங்கியுள்ளது.


அவர்களுடன் இதுபோன்று இணைந்து பணியாற்றுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி’’ என்று சுனில் வாத்வானி தெரிவித்துள்ளார்.