ஐஐடி சென்னை, தன்னுடைய முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களிடம் இருந்து 2023 - 24ஆம் நிதியாண்டில் 513 கோடி ரூபாய் நிதி திரட்டி சாதனை படைத்துள்ளது. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் ரூ.218 கோடி நிதியை ஐஐடி சென்னை பெற்றிருந்தது.


ஐஐடி சென்னை 2023- 24ஆம் நிதியாண்டில் முன்னாள் மாணவர்கள், தொழில்துறையினர், தனிப்பட்ட நன்கொடையாளர்களிடம் இருந்து ரூ.513 கோடி நிதி திரட்டியுள்ளது. இதுதவிர முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட் கூட்டாளர்களிடம் இருந்து 2023- 24ஆம் நிதியாண்டில் ரூ.717 கோடி நிதியுதவிக்கான புதிய உறுதிமொழிகளையும் இக்கல்வி நிறுவனம் ஈர்த்துள்ளது.


கல்வி உதவித் தொகை


தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகவும், சமூகத்தேவைக்காக ஐஐடி சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் தொழில்நுட்பத்தை ஈடுபடுத்துவதற்காகவும் தற்போது திரட்டப்பட்டுள்ள நிதி பயன்படுத்தப்படும். இதுதவிர, தகுதியான மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கும், இக்கல்வி நிறுவனத்தின் வளர்ந்துவரும் உள்கட்டமைப்பு தேவைகளுக்கு ஆதரவு அளிப்பதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.


நடப்பாண்டில் புதிய முயற்சியாக விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு திரட்டப்பட்ட நன்கொடைகளில் இருந்து அவர்களுக்கும் ஆதரவு அளிக்கப்படும்


எந்தவொரு கல்வி நிறுவனத்தையும் விட அதிகத் தொகையை நன்கொடையாகப் பெற்று, தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, நிதி திரட்டுவதில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சிகள், மாணவர்களுக்கான ப்ராஜக்ட்டுகள், இக்கல்வி நிறுவன வளாகத்தில் அதிநவீன உள்கட்டமைப்புத் திட்டங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.


தற்போது திரட்டப்பட்டுள்ள ரூ.513 கோடியானது முந்தைய நிதியாண்டான 2022- 23ல் திரட்டப்பட்ட தொகையான ரூ.218 கோடியுடன் ஒப்பிடுகையில் 135% அதிகமாகும். ரூ.1 கோடிக்கும் அதிகமாக நன்கொடை வழங்கியவர்களின் எண்ணிக்கை 48. (16 முன்னாள் மாணவர் நன்கொடையாளர்கள், 32 கார்ப்பரேட் கூட்டாளர்கள்). ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்களிடம் இருந்தும், தனிப்பட்ட நன்கொடையாளர்களிடம் இருந்தும், இந்திய மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் பொறுப்புணர்வு நிதியில் இருந்தும் நிதி திரட்டப்பட்டு வருகிறது.


முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தனிப்பட்ட நன்கொடையாளர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது, “மிக விரைந்த கல்வி வளர்ச்சிக்கு மிக அதிக அளவில் நிதி திரட்டப்பட வேண்டியது அவசியமாகிறது. முன்னெப்போதையும் விட அதிகளவில் நிதி திரட்டுவதற்கு ஆதரவளித்த சமூகப் பொறுப்புணர்வு நிதி கூட்டாளர்களுக்கும், ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவர்களுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டார்.