இந்த இரண்டாண்டு பாடத்திட்டத்தில் மாணவர்கள் நவீன கடல்சார் சவால்களை சமாளிக்கும் திறன்களைப் பெறவும், தொழில் முன்னேற்றத்தை உந்தச் செய்யவும் ஏதுவாக ஐஓடி, ஏஐ, எம்எல், பிளாக்செயின் போன்ற அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்ப அம்சங்களில் கவனம் செலுத்தப்படும்.


ஐஐடி சென்னையின் மேலாண்மைக் கல்வி, கடல்சார் பொறியியல் துறைகளும், தொழில் பங்குதாரரான ஐ-மாரிடைம் கன்சல்டன்சியும் இணைந்து இந்த 24-மாதகால பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளன. வேகமாக வளர்ந்துவரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை கடல்சார் வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மையில் புகுத்துவதற்காக உலகளாவிய நிபுணர்களை ஈடுபடுத்துவதே இதன் நோக்கமாகும்.


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் கூடிய இளங்கலைப் பட்டத்துடன், குறைந்தது இரண்டாண்டு முழுநேர பணி அனுபவம் பெற்றவர்கள் இதில் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். மாணவர்களைச் சேர்க்கும் நடைமுறையைப் பொறுத்தவரை, ஐஐடி மெட்ராஸ் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் தேர்வும், அதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களிடம் நேர்காணலும் நடைபெறும். செப்டம்பர் 2024-ல் தொடங்கவுள்ள இப்பாடத்திட்டத்தின் முதல் பேட்ச்-க்கான விண்ணப்பப் பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.


எம்பிஏ (டிஜிட்டல் கடல்சார் மற்றும் விநியோகச் சங்கிலி) பாடத்திட்டத்தின் தனித்துவ அம்சங்களை எடுத்துரைத்த ஐஐடி சென்னை இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “நவீன கடல்சார் மற்றும் விநியோகச் சங்கிலித் தொழிலில் ஏற்படும் சிக்கல்களை கையாளும் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோரின் நிபுணத்துவத்தை மேம்படுத்தும் வகையில் புதுமையான இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்ப செயல்பாடுகளை மேம்படுத்துதல், உத்திசார் வளர்ச்சியை அதிகரித்தல் தொடர்பான விரிவான புரிதலை இதில் பங்கேற்போர் அறியச் செய்வதே எங்களது குறிக்கோளாகும்”  எனக் குறிப்பிட்டார்.


ஐஓடி, ஏஐ, எம்எல், பிளாக்செயின் தொழில்நுட்பம்


நவீன கடல்சார் சவால்களை சமாளிக்கும் திறன்களைப் பெறவும், தொழில் முன்னேற்றத்தை உந்தச் செய்யவும் ஏதுவாக ஐஓடி, ஏஐ, எம்எல், பிளாக்செயின் போன்ற அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் பங்கேற்பாளர்கள் 2 ஆண்டுகள் ஈடுபடுவார்கள்.


நான்கு ஆண்டுகள் வரை நீட்டிக்கக் கூடிய இந்த எம்பிஏ பாடத்திட்டத்தில் 900 மணி நேர வகுப்பறை அமர்வுகள் மற்றும் ப்ராஜக்ட்டுகள் இடம்பெறும். மொத்தத்தில் 192 கிரடிட்கள் இருக்கும். இக்கல்வி நிறுவன வளாகத்தில் ஆறு முறை நேரடிப் பயிற்சி வகுப்புகள், ஐஐடி மெட்ராஸ் கற்றல் ஆதாரங்கள், டிஜிட்டல் கடல்சார் நூலகம் போன்ற பயன்களையும் பங்கேற்பாளர்கள் பெற முடியும்.


இப்பாடத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:



  1. இணைந்த கற்றல்முறை: ஆன்லைன் மற்றும் வளாகத்தில் பயிற்சி என தொழில் வல்லுநர்களுக்கு ஏற்ற வகையில் நெகிழ்வுத்தன்மை

  2. முன்னாள் மாணவர் அந்தஸ்து: பட்டதாரிகள் ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவர் அந்தஸ்தைப் பெறுவார்கள். வாழ்நாள் முழுவதும் கற்றல் ஆதாரங்களைப் பெற முடியும்.

  3. புதுமையான கல்வித்திட்டம்: ஏஐ, எம்எல், ஐஓடி, பிளாக்செயின் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பாடத்திட்டம்

  4. தொழில் ஆதரவு: மேம்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு, உலகளாவிய வேலைவாய்ப்புகள், ஐஐடி மெட்ராஸின் தொழில் ஊக்குவிப்பு மற்றும் ஸ்டார்ட்அப் தளத்திற்கான அணுகல்

  5. உலகளாவிய வலையமைப்பு: சர்வதேச அளவிலான வலையமைப்பு வாய்ப்புகள் மற்றும் வளாகத்தில் நேரடிப் பயிற்சி வகுப்புகள்


கட்டணம் மற்றும் நிதியுதவி


பாடத்திட்டத்திற்கான கட்டணம் இந்திய ரூபாயில் 9,00,000 ஆகும். இதைத் தவணைகளில் செலுத்த வேண்டியிருக்கும். படிப்புக் கட்டணத்தில் 50% வரை கல்வி உதவித் தொகைகள் கிடைக்கின்றன. இப்பாடத்திட்டம் வங்கிக் கடன்களுக்கு தகுதி உடையது எனவும் ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.