ஐஐடி மெட்ராஸ், மாணவர்களின் வேலைவாய்ப்பை மதிப்பிடுவதற்காக தேசிய அளவிலான உள்ளகப் பயிற்சி, வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் மதிப்பீட்டை (NIPTA) அறிமுகப்படுத்தியுள்ளது.
கல்வித் துறைக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில் முதன்முறையாக இப்படியொரு மதிப்பீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள் ஏற்கனவே பெற்றுள்ள திறன்களை முழுமையடையச் செய்யும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட பயிற்சி, மதிப்பீட்டு செயல்முறை ஆகியவை வழங்கப்படும். அதே நேரத்தில் வேலைவாய்ப்புகளை வழங்குவோருக்கு சரியான திறமையாளர்களை அடையாளம் காணவும் இத்திட்டம் உதவுகிறது.
முன்னோடி முயற்சி
ஐஐடி மெட்ராஸ் சாஸ்த்ரா பருவ இதழ் (Shaastra Magazine) மூலம் இந்தியா முழுவதும் பொறியியல், டிப்ளமோ மாணவர்களுக்கு அவர்களின் வேலைவாய்ப்புத் திறனை நம்பகமான, தரப்படுத்தப்பட்ட அளவுகோலாகக் கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சித் திட்டத்தை வழங்குவதற்கான முன்னோடி முயற்சியைத் தொடங்கியுள்ளது.
உள்ளகப் பயிற்சி, வேலைக்கான தயார்நிலைக்கு தேசிய அளவில் தரத்தை நிர்ணயிப்பதன் மூலம், ’தேசிய அளவிலான உள்ளகப் பயிற்சி, வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் மதிப்பீடு’ (NIPTA) இந்தியாவில் வேலைவாய்ப்புக்கு மதிப்பிடப்படும் முறையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முதன்முறையாக செயல்படுத்தப்படும் இந்த முன்முயற்சி, மாணவர்களுக்கு தங்களின் அத்தியாவசிய திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அணுகக்கூடிய பயிற்சித் திட்டத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதனைத் தொடர்ந்து அவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக தரப்படுத்தப்பட்ட மதிப்பீடும் வழங்கப்படுகிறது.
தாக்கத்தை ஏற்படுத்தும் NIPTA
வேலைவாய்ப்புகளை வழங்குவோர் சரியான திறமையாளர்களை திறம்பட அடையாளம் காண இந்த வழிமுறை உதவிகரமாக இருக்கும். இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தக்கூடிய அளவுக்கு NIPTA தாக்கத்தை ஏற்படுத்தும்.
வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அதிகரிக்கும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, 2026-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் மதிப்பீட்டு முடிவுகளை வேலைவாய்ப்பை வழங்குவோருடன் பகிர்ந்துகொள்ளவும், தேசிய அளவிலான வேலை மற்றும் பயிற்சி மேளாவை (மெய்நிகர் மூலமோ அல்லது நேரிலோ) ஏற்பாடு செய்யவும் ஐஐடி மெட்ராஸ் திட்டமிட்டுள்ளது.
NIPTA-வின் சிறப்பம்சங்கள்
திட்டமிட்ட 10 முதல் 12 வார பயிற்சிக்குப் பின் தொழில்நுட்பப் பாடங்கள், கணிதத் திறன், தர்க்கரீதியான பகுத்தறிதல், தொடர்பு கொள்ளும் திறன் ஆகியவற்றில் மதிப்பீட்டுத் தேர்வு.
தேர்வு முறை: இந்தியா முழுவதும் கண்காணிப்புடன் கூடிய மையங்களில் 3 மணி நேரம் நேரடித் தேர்வு
இலக்கு குழு: பொறியியல் (3வது மற்றும் இறுதி ஆண்டு), பட்டதாரிகள், டிப்ளமோ (இறுதி ஆண்டு), டிப்ளமோ வைத்திருப்பவர்கள்
சான்றிதழ்: ஐஐடி மெட்ராஸ் வழங்கிடும் செயல்திறன் அடிப்படையிலான சான்றிதழ்
பயிற்சிக்கான வளங்கள்: இலவச வீடியோ விரிவுரைகள், மாதிரிக் கேள்விகள் வழங்கப்படும்
வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு: நிறுவனங்களுடன் முடிவுகள் பகிரப்படும்; தேசிய அளவில் வேலை; உள்ளகப் பயிற்சி மேளாக்களை நடத்தத் திட்டம்.
இவ்வாறு ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.