பிஎஸ் தரவு அறிவியல் (BS Data Science) பாடத்திட்டத்தின் மூலம் 2,500 மாணவ-மாணவிகள் வேலை வாய்ப்புகளையும், தகுதி உயர்வுகளையும் பெற்றுள்ளதாக ஐஐடி சென்னை பெருமிதம் தெரிவித்துள்ளது. 20,000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மற்றொரு பட்டத்துடன் இந்தப் பாடத்திட்டத்திலும் படித்து வருகின்றனர்.


இதுகுறித்து ஐஐடி சென்னை கூறி உள்ளதாவது:


பிஎஸ். தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகள் பட்டப்படிப்பு (BS Degreee in Data Science and Applications) தொடங்கப்பட்டு, நான்காண்டுகளை நிறைவு செய்யவிருக்கும் நிலையில், 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வேலை கிடைக்கவும், தகுதி உயர்வு பெறவும் உதவியாக இருந்துள்ளது.


அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகம், ஜார்ஜியா பல்கலைக்கழகம், பின்லாந்தில் உள்ள ஆல்டோ பல்கலைக்கழகம் போன்ற மதிப்புவாய்ந்த பல்கலைக்கழகங்களில் முதுகலை மற்றும் பிஎச்டி படிப்புகளில் 850க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தங்களின் முக்கிய படிப்புகளையும் கணினி அறிவியல் மற்றும் தரவு அறிவியலுக்கு (Data Science) மாற்றிக் கொண்டுள்ளனர்.


27 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை


கடும் போட்டி நிறைந்த JEE தேர்வை எழுதாமலேயே ஐஐடி சென்னையில் மாணவர்கள் படிப்பதை சாத்தியமாக்கும் வகையில் வரலாற்றில் முதன்முறையாக இப்பாடத்திட்டம் கடந்த ஜூன் 2020-ல் செயல்படுத்தப்பட்டது. இதுவரை நாடு முழுவதும் இருந்து 27,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் சேர்ந்துள்ளனர். வசிப்பிடம், வயது போன்ற தடைகளைத் தாண்டி ஐஐடி தரத்துடன் உயர்கல்வியை அணுக முடிவதால் நாட்டின் அனைத்துப் பகுதிகளில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிஎஸ் பட்டப்படிப்பு வெற்றி பெற்றுள்ளது.


கல்விக் கட்டணம் இலவசம்


சமூக மற்றும் பொருளாதார ரீதியாக சவால்களை சந்திக்கும் பிரிவினருக்கும் கல்விக்கான சமமான அணுகுமுறையை இப்பாடத்திட்டம் உறுதி செய்வதுடன், கட்டணத் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் அளித்து வருகிறது.


குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவிகளுக்கும், குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகிறது.


சமூகப் பொறுப்புணர்வு நிதியின் மூலம்  வெரிசோன், ரெனால்ட் நிசான், எச்எஸ்பிசி, டாடா ஏஐஏ, சதர்லேண்ட், எல்டிடிஎஸ், எல்&டி தேல்ஸ், டன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட், வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் இதற்கான தொகையை வழங்குகின்றன. இதுதவிர தனிநபர்களிடம் இருந்தும், அரசின் பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்களின் கீழும் நன்கொடைகள் பெறப்படுகின்றன. இத்திட்டத்தின் வாயிலாக இதுவரை 3,645 மாணவ-மாணவிகள் பயனடைந்திருக்கின்றனர். பணத்தைப் பற்றிய கவலையின்றி அவர்களால் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடிகிறது.


இந்த நிலையில் மே 2024 பேட்ச்சுக்கான விண்ணப்பங்களைப் பெற கடைசி நாள் மே 26, 2024. ஜூலை 7ஆம் தேதி இதற்கான தேர்வு நடைபெற உள்ளது.


கூடுதல் தகவல்களுக்கு: https://app.onlinedegree.iitm.ac.in/auth/login?apply_qualifier=true&_gl=1*1qgt4ed*_gcl_au*MTY4MjIyOTM3LjE3MTM0Mzc3NjA.*_ga*MTgwMzg3Njc2Ni4xNzEzNDM3NzYw*_ga_08NPRH5L4M*MTcxNDcyMzMxNC4xLjAuMTcxNDcyMzMxNC42MC4wLjA


ஆர்வமுள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்- https://study.iitm.ac.in/ds/


தொலைபேசி எண்: 7850999966