ஐஐடி சென்னையின் சாஸ்த்ரா வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழா 2025 (Annual Tech Festival Shaastra) ஜனவரி 3 முதல் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக ஐஐடி இயக்குநர் காமகோடி அறிவித்துள்ளார்.


நாட்டிலேயே மிகப் பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் இத்திருவிழாவில் 130 அரங்குகள் இடம்பெறுகின்றன. அடுத்தடுத்து 80 நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், ஐந்து நாட்களில் 70,000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஜன.3 முதல் சாஸ்த்ரா விழா


ஐஐடி சென்னை, நாட்டிலேயே மிகப் பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் சாஸ்த்ரா திருவிழாவின் 26-வது ஆண்டு நிகழ்வை 2025 ஜனவரி 3-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடத்தவிருக்கிறது.


முற்றிலும் மாணவர்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் இந்த மாபெரும் நிகழ்வில் ஐஐடி மெட்ராஸ்-ன் 750-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பல்வேறு வகைகளில் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். ஐஎஸ்ஓ 9001:2015 சான்றளிக்கப்பட்ட இத்திருவிழாவில் 130 அரங்குகள் இடம்பெறுகின்றன. அடுத்தடுத்து 80 நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், ஐந்து நாட்களில் 70,000 பேர் இவற்றைப் பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிகள், மாநாடுகள், விரிவுரைகள், கண்காட்சிகள், பயிலரங்கங்கள் வாயிலாக இந்த அறிவியல்- தொழில்நுட்ப நிகழ்வை சாஸ்த்ரா கொண்டாடவிருக்கிறது.


இதுகுறித்து ஐஐடி சென்னை இயக்குநர் காமகோடி கூறுகையில், “சாஸ்த்ரா போன்றதொரு மாபெரும் நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம், மாணவர்களிடையே நிர்வாகத் திறன், அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு, பொது நோக்கத்திற்காக பெரிய குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் திறன் போன்ற மதிப்புமிக்க பண்புகளை வளர்க்கச் செய்கிறது. ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் இதுபோன்ற தேசிய நிகழ்வுகளில் பங்கேற்று மதிப்புவாய்ந்த திறமையை வெளிக்கொணர முடிகிறது.


எல்லோருக்கும் அழைப்பு


பல்வேறு அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்கள், ஸ்டார்ட்அப்கள், தொழில்முனைவோர் மட்டுமின்றி, தலைசிறந்த முக்கிய பிரமுகர்களையும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது. அவர்கள் எல்லோரையும் எவ்வாறு தொடர்பு கொள்வது, அவர்களை எப்படிக் கையாள்வது என்பதை மாணவர்கள் கற்றுக்கொள்ள முடிகிறது” எனக் குறிப்பிட்டார்.


சாஸ்த்ராவில் பல்வேறு தொழில்நுட்ப நிகழ்வுகள் முதன்முறையாக நடத்தப்படுகின்றன. குறிப்பாக சாஸ்த்ரா வான்வழி ரோபாட்டிக்ஸ் சவால் (Shaastra Aerial Robotics Challenge), ரோபோ சாக்கர் (RoboSoccer), ஆல்கோ டிரேடிங் (Algo Trading), பெட்ரி டிஷ் சவால் (Petri-dish Challenge) ஆகியவை நடைபெற உள்ளன.


அதேபோல சாஸ்த்ரா 2025-ல் பல்வேறு மாநாடுகள் மற்றும் உச்சிமாநாடுகளும் நடைபெறவிருக்கின்றன. குறிப்பாக தொழில்துறை செயற்கை நுண்ணறிவு மாநாடு (IndustriAI Conference), எதிர்கால நகரங்கள் மாநாடு (Future Cities Summit), டெக்-எண்டர்டெயின்மென்ட் நைட் (Tech-Entertainment Night), நகைச்சுவை இரவு (Comedy Night) ஆகிய உச்சி மாநாடுகள் நடைபெற உள்ளன.