சாதி எண்ணத்துடன் செயல்படும் பள்ளி ஆசிரியர்களை உடனடியாக இடம் மாற்றம் செய்ய வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Continues below advertisement


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே சாதி இன உணர்வுகள்‌ காரணமாக உருவாகும்‌ வன்முறைகளைத்‌ தவிர்க்கவும்‌, நல்லிணக்கம்‌ ஏற்படுத்தவும்‌ வழிமுறைகளை வகுக்கவும்‌ சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர்‌ கே.சந்துரு  தலைமையில்‌ ஒரு நபர்‌ குழு அமைத்து அரசால்‌ஆணையிடப்பட்டது. இவ்வரசாணையின்‌ அடிப்படையில்‌ மேற்படி ஒரு நபர்‌ குழுவானது தனது அறிக்கையினை 18.06.2025 அன்று அரசுக்கு சமர்ப்பித்தது.


மேற்படி ஒரு நபர்‌ குழுவால்‌ பரிந்துரைக்கப்பட்ட அறிக்கையினை, 18.08.2025 அன்று அரசு தலைமைச்‌ செயலாளர்‌, தலைமையில்‌ நடைபெற்ற கூட்டத்தில்‌ விவாதிக்கப்பட்டு, அதில்‌ தொடர்‌ நடவடிக்கை எடுக்க வேண்டிய பரிந்துரைகளின்‌ மீது உடன்‌ உரிய நடவடிக்கையினை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.


இந்நிலையில்‌, சாதிய ரீதியான மோதல்களை தவிர்க்கவும்‌மாணவர்களிடையே ஒற்றுமையை பேணவும்‌ எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்‌:


பள்ளிகளில் சாதி ரீதியான பாகுபாடு


சாதி அல்லது வகுப்புவாத எண்ணத்தை வெளிப்படுத்தும்‌ அல்லது தீங்கு விளைவிக்கும்‌ வகையில்‌ எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்‌ ஆசிரியர்கள்‌ தொடர்ந்து அப்பள்ளியில்‌ தொடர அனுமதிக்கப்படும்‌ நிலையில்‌, பள்ளிகளின்‌ நம்பகத்தன்மை குறைந்து பள்ளி வளாகத்தில்‌ பதட்டம்‌ அதிகரிக்கும்‌ வாயப்பு உள்ளது. எனவே, சாதி அல்லது வகுப்புவாத எண்ணத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தும்‌ ஆசிரியர்‌ மீது பெறப்படும்‌ புகார்‌ குறித்து முதன்மைக்‌ கல்வி அலுவலர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, மேற்படி ஆசிரியர்‌ உடனடியாக அப்பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாற்றப்படல்‌ வேண்டும்‌.


சாதிய அடையாளங்களை மந்தனமாக வைத்திருத்தல்‌ (Confidentiality of Caste Identity):


மாணவர்களுக்கு மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ நலத்துறை மூலம்‌ வழங்கக்கூடிய தேவையான கல்வி உதவித்தொகை விஷங்கள்‌ மந்தனமாக பராமரிக்கப்படல்‌ வேண்டும்‌. இதுபோன்ற விவரங்களை சேகரிக்கும்போதோ அல்லது உதவித்‌ தொகைகள்‌ வழங்கப்படும்‌ போதோ, சார்ந்த மாணவர்கள்‌ தனித்தனியாக தலைமை ஆசிரியர்‌ அலுவலகத்திற்கு நேரில்‌ அழைக்கப்பட்டு இவ்விவரங்கள்‌ தெரிவிக்கப்படல்‌ வேண்டும்‌. மேலும்‌, இதுதொடர்பாக பேணப்படும்‌ பதிவேடு உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையாக பொதுவெளியில்‌ தெரியும்‌ வண்ணம்‌ காட்சிப்படுத்துதல்‌ கூடாது எனவும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.


பள்ளிகளில்‌ மாணவர்களுக்கு தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை (Ban on Mobile Phones in Schools)


பள்ளிகளில்‌ மாணவர்கள்‌ தொலைபேசி பயன்படுத்துவது முற்றிலும்‌ தடை செய்யப்பட்டு, தற்போது இந்நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும்‌, பள்ளிகளில்‌ மாணவர்கள்‌ தொலைபேசி பயன்படுத்துவதை அறியப்படும்‌ நிலையில்‌, அத்தொலைபேசி தலைமை ஆசிரியராலோ/ வகுப்பு ஆசிரியராலோ பறிமுதல்‌ செய்யப்பட்டு, அத்தொலைப்பேசியினை சார்ந்த பெற்றோரிடம்‌ ஒப்படைத்தல்‌வேண்டும்‌. மாணவர்கள்‌ தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பாக தக்க அறிவுரையினை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.