ஆடிட்டர் படிப்புகளுக்கு நடத்தப்படும் சிஏ தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு, புதிய தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி இறுதித் தேர்வுகள் மே 16ஆம் தேதி மற்றும் 18ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. இடைநிலைத் தேர்வுகள் மே 22 மற்றும் 24ஆம் தேதிகளில் நடக்கும் என்று ஐசிஏஐ அறிவித்துள்ளது. ஏற்கெனவே இதற்கான அனுமதிச் சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
ஐசிஏஐ தேர்வில் தேர்ச்சி கட்டாயம்
இந்தியாவில் ஆடிட்டர் எனப்படும் பட்டய கணக்காளராக ஆசைப்படுவோர், ஐசிஏஐ எனப்படும் பட்டய கணக்காளர்கள் நிறுவனம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது கட்டாயம் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசு பட்டயக் கணக்காளருக்கான சான்றிதழை வழங்கும்.
இந்தத் தகுதித் தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. குறிப்பாக முதல்நிலைத் தேர்வு (Foundation Examination), இடைநிலைத் தேர்வு (Intermediate Examination), இறுதித் தேர்வு (Final Examination) என்ற வரிசையில் தேர்வு நடக்கும். பட்டப் படிப்பை முடித்தவர்கள், முதல்நிலைத் தேர்வை எழுதத் தேவையில்லை. இடைநிலை மற்றும் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது.
அதே நேரத்தில், ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றவர்கள், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகளுக்குத் தகுதியானவர்கள் ஆவர்.
ஆண்டுக்கு 3 முறை சிஏ தேர்வு
ஜனவரி, மே / ஜூன் மாதங்களில் என ஆண்டுக்கு 2 முறை சிஏ தேர்வு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கூடுதலாக ஒரு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்நிலை, இடைநிலைத் தேர்வுகள் 3 முறை நடைபெற உள்ளன.
புது தேதிகள் என்ன?
திருத்தப்பட்ட அட்டவணையின்படி, மறைமுக வரிச் சட்டங்கள் குறித்த இறுதித் தேர்வு (குரூப் II) தாள் 5 மற்றும் பரிமாற்ற விலை நிர்ணயம் குறித்த INTT-AT தாள் 1 ஆகியவை மே 16 ஆம் தேதி நடைபெற உள்ளன. அதேபோல், மே 13 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஒருங்கிணைந்த வணிக தீர்வுகள் குறித்த இறுதித் தாள் 6 மற்றும் சர்வதேச வரி - பயிற்சி குறித்த INTT-AT தாள் 2 ஆகியவை மே 18 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
முன்னர் மே 9 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த இடைநிலைத் தேர்வு (குரூப் II) தாள் 4, செலவு மற்றும் மேலாண்மை கணக்கியல், இப்போது மே 20 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. முதலில் மே 11ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த தாள் 5, மே 22 ஆம் தேதி நடைபெறும், அதே நேரத்தில் மே 14ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நிதி மேலாண்மை மற்றும் உத்திகள் மேலாண்மை குறித்த தாள் 6, மே 24 ஆம் தேதி மீண்டும் திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும் இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளதால், சிஏ தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.