தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு வரும் ஜூலை 24 ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்வுக்கு கடுமையான போட்டி நிலவும் சூழலில் எதை படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும்? என்பதைப் பற்றிய குவிக் ரவுண்ட் அப் இது.
தேர்வுக்குத் தயாரா?
தேர்வுக்கு, படிக்கின்ற நேரத்தை அட்டவணையிட்டு தினமும் படியுங்கள். தினமும் 4 மணி நேரம் தமிழ் பகுதிக்கு ஒதுக்கி கொள்ளுங்கள். கணிதப் பகுதிக்கு தினமும் 1 மணி நேரத்திற்கு மேல் ஒதுக்குங்கள். மீதமுள்ள 4-6 மணி நேரத்தை பொது அறிவு பகுதிக்கு ஒதுக்கி படியுங்கள்.
முதலில் தமிழ்ப் பாடம்:
முதல் பகுதியான தமிழில் 100 வினாக்கள் கேட்கப்படுகின்றன. நாம் மிக முக்கியமாக படிக்க வேண்டிய பகுதி இதுதான். இதில் 95 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்க வேண்டும் என டார்கெட் வைத்து படிக்க வேண்டும். இதற்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை படிக்க வேண்டும்.
கணிதம் கவனம்:
கணித பகுதி வினாக்களில் நாம் நன்றாக பயிற்சி செய்தால் 25 வினாக்களில் 23-25 வினாக்களுக்கு சரியாக விடையளிக்கலாம். இதில் விகிதம், இலாபம்-நட்டம், அளவீடுகள், சதவீதம், வட்டி கணக்குகள், இயற்கணிதம் போன்ற பகுதிகளில் இருந்து தான் அதிக வினாக்கள் கேட்கப்படுகின்றன. இதற்கு 6-10 வரையிலான பள்ளிப் பாடப்புத்தகங்களை படித்தாலே 25 வினாக்களுக்கும் விடையளிக்கலாம்.
பொது அறிவு முக்கியம்:
பொது அறிவுப் பகுதியில் 75 வினாக்கள் கேட்கப்படும். இதில் 60-65 வினாக்களுக்கு சரியாக விடையளிக்கும் வகையில் தயாராகிக் கொள்ளுங்கள். இதில் அரசியலமைப்பு, இந்திய தேசிய இயக்கம், புவியியல், வரலாறு, அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். அதேநேரம் புதிதாக யூனிட் 8 (தமிழ்நாடு மரபு, பண்பாடு, இலக்கியம்) மற்றும் யூனிட் 9 (தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம்) ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தேர்வாணையம் வெளியிட்டுள்ள மாதிரி வினாத்தாளில் இந்த இரு யூனிட்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிப் பாடப்புத்தகங்களை மிஸ் செய்யாதீர்கள்:
9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளியுங்கள். இவ்விரு புத்தகங்களில் இருந்து அதிகப்படியான வினாக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. அடுத்தப்படியாக 6,7,8 ஆம் வகுப்பு புத்தகங்களை முழுமையாக படித்துக் கொள்ளுங்கள். சுமார் 10 வினாக்கள் 6-10 ஆம் வகுப்பு புத்தகங்களை தாண்டி வெளியில் கேட்கப்படலாம். இதற்கு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகங்களை படித்துக் கொண்டாலே போதுமானது. ஆனால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகங்களை முழுமையாக படிக்க தேவையில்லை.
குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் பெரும்பாலும் பள்ளி பாடப் புத்தகங்களை ஒட்டியே உள்ளதால், பள்ளி புத்தகங்களை முழுமையாக படித்து பயிற்சி பெற்றாலே தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்.
தேர்வு தேதி, காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட முக்கிய விவரம்:
ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடத்தப்படும். மொத்தம் 200 கேள்விகளுக்கு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும். முதல் 100 கேள்விகள் தமிழ் சார்ந்து கொள்குறி வகையில் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் இருந்து 75 கேள்விகளும் கணக்கு மற்றும் நுண்ணறிவு பகுதியில் இருந்து 25 கேள்விகளும் கேட்கப்படும். மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும்.
மொத்தம் 7,382 காலி இடங்கள் உள்ளன. அனைத்து இடங்களும் தேர்வு நடத்தப்படும். 81 இடங்கள் - விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7,301 இடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படும்.
200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள்: குரூப் 4 தேர்வு முறை எப்படி?
ஜூலை 24ஆம் தேதி தேர்வு நடத்தப்படும். மொத்தம் 200 கேள்விகளுக்கு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும். முதல் 100 கேள்விகள் தமிழ் சார்ந்து கொள்குறி வகையில் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் இருந்து 75 கேள்விகளும் கணக்கு மற்றும் நுண்ணறிவு பகுதியில் இருந்து 25 கேள்விகளும் கேட்கப்படும். மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும்.
முதல் பகுதியில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் பெற்றவர்களின் தேர்வுத்தாள் மட்டுமே திருத்தப்படும். மொத்தம் 90 மதிப்பெண்களைக் குறைந்தபட்சம் தேர்வர்கள் பெற வேண்டும். அவர்களின் பெயர்கள் மட்டுமே தரவரிசைப் பட்டியலில் இடம்பெறும்.
தேர்வு முடிவுகள்
அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். அதே மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். நவம்பர் மாதத்தில் நேர்காணல் நடத்தப்படும்.