நான்‌ முதல்வன்‌ திட்டத்தின்‌கீழ்‌ 2022 -2023 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசுப் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் இளம்பகவத் வெளியிட்டுள்ளார். 


நுழைவுத்தேர்வுகள்:


தமிழகத்தில்‌ உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்கள்‌ விருப்பத்தின்‌ அடிப்படையில்‌ நுழைவுத்‌ தேர்வுகள்‌ எழுதி உயர்கல்வி படிப்புகள்‌ தொடரச்‌ செய்ய வேண்டும்‌ என்கின்ற நோக்கில்‌ அவர்களுக்கு வழிகாட்டுவதற்கு பல்வேறு முன்னேடுப்புகள்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையால்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அதன்‌ அடிப்படையில் ஆர்வமுள்ள அரசுப்‌ பள்ளி மாணவர்கள்‌ சரியான நேரத்தில்‌ நுழைவுத்‌ தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக விண்ணப்பங்கள்‌ விண்ணப்பிக்கத் தொடங்கும்‌ நாள்‌, முடிவடையும்‌ நாள்‌, கட்டண விவரம்‌ போன்றவற்றுடன்‌ தொடர்புடைய தேர்வு சார்ந்த தகவல்கள்,‌ கடிதத்தின்‌ வாயிலாக அனைத்து மாவட்டங்களுக்கும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி..?


இதன்‌ தொடர்ச்சியாக. ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த என்எஸ்எஸ் மாவட்ட தொடர்பு அலுவலர்கள் வாயிலாக, நாட்டு நலப்பணித்‌ திட்ட மாணவர்கள்‌ பள்ளிகளுக்கு வருகின்ற 04.01.2023 ஆம்‌ தேதி முதல்‌ நுழைவுத்‌ தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய ஆசிரியர்களுடன்‌ இணைந்து மாணவர்களுக்கு உதவுவார்கள்‌.


அந்தந்த மாவட்டத்தில்‌ உள்ள என்எஸ்எஸ் மாணவர்கள்‌ இதற்கான முன்‌ தயாரிப்பிற்காக 02.01.2023 மற்றும்‌ 03.01.2023 ஆம்‌ தேதிகளில்‌ பள்ளி தலைமையாசிரியருடன் இணைந்து பணியாற்றுவர்.


04.01.2023 ஆம்‌ தேதி முதல்‌ 31.01.2023 ஆம்‌ தேதி வரை என்எஸ்எஸ்  மாணவர்கள்‌, பள்ளிகளுக்கு வந்து நுழைவுத்‌ தேர்வுகளுக்கான விண்ணப்பத்தை மாணவர்களுடன்‌ இருந்து பூர்த்தி செய்ய உதவுவார்கள்‌.


நுழைவுத்‌ தேர்வு விண்ணப்பித்த மாணவர்களின்‌ தகவல்களை, ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில்‌ பதிவு செய்ய வேண்டும்‌.


விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும்‌ மாணவர்களிடம்‌ தாங்கள்‌ பயிலவிருக்கும்‌ உயர் கல்வி சார்ந்த நுழைவுத்‌ தேர்வு விருப்பங்களை கேட்டறிந்து. அவர்களை என்எஸ்எஸ் மாணவர்களோடு அமர வைத்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய அனைத்து ஏற்பாடுகளையும்‌ சார்ந்த தலைமை ஆசிரியர்கள்‌ மேற்கொள்ள வேண்டும்‌.




ஒவ்வொரு பள்ளியிலும்‌ உள்ள பயிற்சி பெற்ற ஆசிரியர்களால்‌ நுழைவுத்‌ தேர்வு விண்ணப்பித்தல்‌ சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள sensitization வீடியோக்களை அனைத்து மாணவர்களுக்கும்‌ ஹைடெக் ஆய்வகம் வாயிலாக காட்சிப்படுத்த வேண்டும். அதன் மூலம், விழிப்புணர்வை உண்டாக்கி ஜேஇஇ உள்ளிட்ட அனைத்து நுழைவுத்‌ தேர்வுகளையும்‌ மாணவர்களின்‌ விருப்பத்திற்கேற்ப விண்ணப்பிக்க ஊக்கமளிக்க வேண்டும்‌.


முதன்மை கருத்தாளர்கள்‌ அனைவரும்‌ தங்களுடைய மாவட்டத்திலுள்ள பள்ளிகளில்‌ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின்‌ தகவல்களை பெற்று 15.01.2023 க்குள்‌ மின்னஞ்சலில்‌ அனுப்பி வைக்க வேண்டும். இதுகுறித்து அனைத்து முதன்மைக்‌ கருத்தாளர்களை அறிவுறுத்திட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌ என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.