டெல்லியில் கடும் குளிர் காரணமாக, தொடக்கப் பள்ளிகளுக்கு ஜனவரி 12ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக ஜனவரி 6ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நர்சரி முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு (ஜன.12) பள்ளிகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


குளிர்கால விடுமுறை


டெல்லியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் குளிர் கடுமையாக இருக்கும். அப்போது குளிர்கால விடுமுறை அளிக்கப்படும். இதற்கிடையே நவம்பர் மாதத்தில் காற்று மாசு காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது. 


என்ன காரணம்?


டெல்லியின் காற்றின் தரம் கடுமையாக மோசமடைந்தை அடுத்து காற்று மாசு அதிகரித்தது. தொடர்ந்து நவம்பர் 10-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இதர வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு உச்சம் தொட்டதை அடுத்து சுவாசப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து ஏற்கனவே மருத்துவர்கள் கவலை தெரிவித்தனர். குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டது. 6-12 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அதிஷி மார்லெனே அறிவுறுத்தி இருந்தார்.


இதைத் தொடர்ந்து கடும் காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு நவம்பர் 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.






இதனால் குளிர்கால விடுமுறை நாட்களின் அளவு குறைக்கப்பட்டது. ஜனவரி 6ஆம் தேதி வரை மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது டெல்லியைக் குளிர் வாட்டி வருகிறது. இதனால் விடுமுறையை நீட்டிப்பதாக டெல்லி மாநில கல்வித்துறை அமைச்சர் அதிஷி மார்லெனே அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இதுகுறித்த தகவலை, அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள் மூலமாகவும் குறுஞ்செய்தி, போன் கால்கள் மூலமாகவும் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆண்டுதோறும் அதிகரிக்கும் காற்று மாசு!


ஒவ்வோர் ஆண்டிலும் டெல்லி மாநிலத்தில் காற்று மாசு அதிகரிப்பதும் அதனால், பள்ளி, கல்லூரி, நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதும் தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.