உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சென்னை, சைதாப்பேட்டை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Open University), அகடமிக் பிளாக் (Academic Block) பட்டமளிப்பு அரங்கில் (Convocation Hall) நேற்று மதியம் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பில் இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக அரசியலமைப்பு நாள் (World Constitution Day 2024) நிறைவு விழாவில் (Veledictory Ceremony) கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.


அப்போது அவர் பேசியதாவது:


’’கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் எல்லாம் படிக்க வேண்டும் என்பதற்காகவே புதுமைப் பெண் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசியல் அறிவியலில் பாடத்தில் இத்தனை பெண்கள் சேர்ந்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 


ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது நிறைய உரையாடல்கள் நிகழ்த்தப்படும். இறையாண்மை ஜனநாயக குடியரசு என்று அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கப்பட்டது என்று பேசிக் கொண்டிருந்த அமைச்சர் பொன்முடி,ஒற்றை ஆட்சி (Unitary state) என்றால் என்ன? என்று மாணவர்களிடம் கேள்வி எழுப்பினார்.


ஆனால் யாரும் பதில் சொல்லவில்லை.


‘’அரசியல், பொது நிர்வாகத் துறை மாணவர்கள்தானே இங்கு வந்திருக்கிறீர்கள்.. யாருக்கும் தெரியவில்லையா? எங்கே இருக்கிறது?’’ என்று கேட்க, யாருமே வாயைத் திறக்கவில்லை.


’’யாராவது ஒருவராவது சொல்லுங்களேன். ஆசிரியராக இருந்ததால் கேள்வி கேட்டுப் பழகிவிட்டது. பதில் சொல்லுங்கள்’’ என்று அமைச்சர் பொன்முடி கேட்க, ஒரு மாணவர் இந்தியா என்று பதில் கூறினார்.


’’இந்தியாவா?’’ என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், ’’ஆசிரியர்களாவது சொல்லுங்கள்’’ என்று கேட்டார்.


பேராசிரியர் ஒருவர், பாண்டிச்சேரி என்று கூறினார். உடனே ஆவேசமான அமைச்சர், ’’நீங்கள் எல்லாம் அரசியல் அறிவியல் துறை பேராசிரியரா? இதுகூடத் தெரியாமல் உட்கார்ந்து இருக்கிறீர்களே? என்ன பாடம் நடத்துகிறீர்கள்?’’ என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். ’’ஆசிரியர்களுக்கு முதலில் பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.


தொடர்ந்து, ’’ஒற்றை ஆட்சி என்றால் ஒரே மத்திய அரசு என்று பொருள். அதன்கீழ் மாநிலங்கள் எவையும் இருக்காது. மத்திய அரசு மட்டுமே இருக்கும். அதன் கீழ் உள்ளாட்சித் துறைகள் மட்டும் இருக்கும். இதற்கு உதாரணம் இங்கிலாந்து.


ஒற்றை ஆட்சியைப் போல கூட்டாட்சி அரசு உள்ளது. இதற்கு அப்போதைய உதாரணம் அமெரிக்கா. அங்குதான் முதன்முதலில் கூட்டாட்சி அறிமுகம் செய்யப்பட்டது’’.


இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


மாணவர்கள் மத்தியிலேயே பேராசிரியர்களுக்கும் சேர்த்து அமைச்சர் பொன்முடி பாடமெடுத்தது விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.