கோவையை தலைமையிடமாக கொண்டு, மேற்கு மண்டல காவல் துறை தலைவர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கோவை மற்றும் சேலம் ஆகிய இரண்டு காவல் சரகங்களுக்கு உட்பட்ட, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களின் தலைவராக ஐ.ஜி. எனப்படும் மண்டல காவல் துறை தலைவர் நியமிக்கப்படுவார். இது மிகவும் முக்கியமான பொறுப்பு என்பதால், இந்தப் பணிக்கு அனுபவமும், திறமையும் உள்ள நபர்களே நியமிக்கப்படுவது வழக்கம்.


கடந்த 2002 ம் ஆண்டில் மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் நரிந்தரபால் சிங் என்பவர் மேற்கு மண்டலத்தின் முதல் காவல் துறை தலைவராக பணி புரிந்தார். அது முதல் கடந்த 2023 ம் ஆண்டு வரை 18 ஐ.ஜி.க்கள், மேற்கு மண்டல காவல் துறை தலைவராக பணியில் இருந்துள்ளார். இந்தப் பட்டியலில் உள்ள அனைவரும் ஆண்களாகவே இருந்தனர்.


மேற்கு மண்டலத்தின் முதல் பெண் ஐ.ஜி. பாவானீஸ்வரி


ஆனால், கடந்த 2023 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த சுதாகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அப்பதவிக்கு சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இணை ஆணையராக பணியாற்றி வந்த கே.பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக மேற்கு மண்டல காவல் துறையின் முதல் பெண் ஐ.ஜி. என்ற பெருமையையும் அவர் பெற்றார். ஆண்களின் பெயர்கள் மட்டுமே இருந்த வந்த மேற்கு மண்டல ஐ.ஜி.க்கள் பட்டியலில், 19 வதாக இடம்பெற்ற பவானீஸ்வரியின் பெயரே முதல் பெண்ணின் பெயராக  இடம்பெற்றது.



யார் இந்த பவானீஸ்வரி?


தமிழ்நாட்டை சேர்ந்த கே.பவானீஸ்வரி 2002 ம் ஆண்டு காவல் துறை அதிகாரியாக தனது பணியை துவக்கினார். கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல் துறை அதிகாரியாக பணி புரிந்த அனுபவம் கொண்டவர். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சென்னை போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையாளர், திருச்சி மண்டல காவல் துறை துணைத்தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் திறம்பட செயலாற்றி உள்ளார்.



ஆளுமை மிக்க முதல்வர்களுடன் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்


கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு முன்னாள் முதலமைச்சர்கள் உடனும் பணி புரிந்த அனுபவம் பெற்றவர் பவானீஸ்வரி. பின்னர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய அரசு அதிகாரிகள் மீதான சொத்துக்குவிப்பு மற்றும் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைகள் இவரது மேற்பார்வையில் தான் நடந்து வந்தது. பின்னர் இலஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக பவானீஸ்வரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 2023 ம் ஆண்டு மேற்கு மண்டல காவல் துறை தலைவராக நியமிக்கப்பட்ட பவானீஸ்வரி, திறம்பட பணியாற்றி வருகிறார்.


தனி முத்திரை பதித்தவர் பவானீஸ்வரி


23 ஆண்டுகளாக காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வரும் பவானீஸ்வரி, பணி புரிந்த இடங்களில் எல்லாம் தனக்கென தனித்த முத்திரை பதித்துள்ளார். இந்திய அளவில் சிறப்பாக பணியாற்றும் காவல் துறையினருக்கு வழங்கப்படும் ஜனாதிபதி விருது பவானீஸ்வரிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தனது சிறப்பான பணிக்காக அவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். கடினமாக துறைகளில் இருக்கும் போது தான் திறமைகள் வெளிப்படும். அந்த வகையில் ஆணாதிக்கம் மிகுந்த காவல் துறை பணியில் ஒரு பெண்ணாக தனது திறமையான பணிகளின் மூலம் மேற்கு மண்டல காவல்துறை தலைவராக மிளிர்கிறார், பவானீஸ்வரி.


ஐபிஎஸ் அதிகாரிக்கே உரிய மிடுக்கோடு, குற்றவாளிகள் மத்தியில் கடினமானவராக பவானீஸ்வரி இருந்தாலும், மற்றவர்கள் மீது காட்டும் அன்பும், பரிவும், பழகும் விதமும், அவரின் பொறுப்புக்கு மேலும் அழகு சேர்ப்பதாக சிலாகின்றார்கள் அவரது நண்பர்கள்