உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத் தொகையை ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தி பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.


இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அப்போதைய செயலர் காகர்லா உஷா அரசாணை வெளியிட்டிருந்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:


''ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஓய்வுபெற்ற, பணியில் இருக்கும்போது உயிரிழந்த ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.


ரூ.5 ஆயிரம் டூ ரூ.50 ஆயிரம்


குறிப்பாக தொழில்நுட்பக் கல்வி, டிப்ளமோ, பட்டப் படிப்பு போன்ற உயர்கல்வி படிப்பதற்கான கல்விக் கட்டணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2021-22 கல்வியாண்டு வரை பட்டப் படிப்புக்கு ரூ.5 ஆயிரம், டிப்ளமோ படிப்புக்கு ரூ.2,500 என வழங்கப்பட்டது. பிறகு இந்தத் தொகை 2022-23 கல்வியாண்டு முதல் பட்டப் படிப்புக்கு ரூ.10 ஆயிரம், டிப்ளமோ படிப்புக்கு ரூ.5 ஆயிரம் என உயர்த்தி வழங்கப்பட்டது.


இதற்கிடையே முதல்வரின் அறிவிப்பின்படி தகுதியுள்ள ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு தொழிற்கல்வி பட்டப்படிப்பு படிக்க கல்வி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் உயர்கல்வி கட்டணத் தொகை அல்லது ரூ.50 ஆயிரம், தொழிற்கல்வி டிப்ளமோ படிக்க கல்லூரிகளால் நிர்ணயிக்கும் கல்வி கட்டணத் தொகை அல்லது ரூ.15 ஆயிரம் இதில் எது குறைவோ அந்த தொகை அளிக்கப்பட உள்ளது.


நிதி பெறுகை எப்படி?


இந்த உயர் கல்வி கட்டணத் தொகை, தேசிய ஆசிரியர் நல நிதியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையில் பெறப்படும் வட்டித் தொகையில் இருந்து மட்டுமே வழங்கப்பட வேண்டும். மாநில அளவில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு, அக்குழு தகுதியுள்ள நபர்களைத் தேர்வு செய்யும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல இந்தத் தொகையைப் பெற நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 


* ஆசிரியரின்‌ ஒரு குழந்தைக்கு தொழிற்கல்வி பட்டப்‌ படிப்பு மற்றும்‌ பட்டயப்‌ படிப்பு பயிலும்‌ மாணவர்களுக்கு கல்வி கட்டணத்‌ தொகை வழங்கப்படும்‌.


* ஒவ்வொரு கல்வியாண்டும்‌ தேசிய ஆசிரிய நல நிதி திட்டத்தின்‌ கீழ்‌ ஆசிரியர்‌ தின கொடி விற்பனை மூலம்‌ பெறப்படும்‌ நிதியின்‌ மூலம்‌ ஆசிரியர்களின்‌ குழந்தைகள்‌ பயன்பெறுவர்‌.


* விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு தொழிற்கல்வி, பட்டப்‌ படிப்பு மற்றும்‌ பட்டயப்‌ படிப்பு படிக்க இருக்கும் மாணவர்கள்‌ தெரிவுசெய்யப்படுவர்‌.


* பெற்றோர்‌ ஆண்டு மொத்த வருமானம்‌ ரூ. 7,20,000-க்குள் இருக்க வேண்டும்‌.


* ஒவ்வொரு கல்வி ஆண்டிலும்‌ அதிகப்படியாக ஆசிரியர்களின்‌ பிள்ளைகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ உயர்கல்வி பயிலும்‌ மாணவருக்கு ஒரு ஆண்டு மட்டும்‌ அந்த மாணவன்‌ முதலாம்‌ ஆண்டு தேர்ச்சி பெற்றவுடன்‌ கல்வி
கட்டணத்தொகை வழங்கப்படும்‌. 


* மாணவர்களை தெரிவு செய்யும்போது தாய்‌ / தந்தையை இழந்த மாணவர்களுக்கு 20 சதவிகிதத்திலும்‌, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 10 சதவிகிதத்திலும்‌ மற்றும்‌ எஸ்சி/ எஸ்டி வகுப்பைச்‌ சார்ந்த மாணவர்களுக்கு 20 சதவிகிதத்திலும்‌ மற்றும்‌ மாணவிகளுக்கு 30% விகிதத்திலும் முன்னுரிமை அளிக்கப்படும்‌. ௬


* ஒவ்வொரு ஆண்டும்‌ ஆசிரியர்‌ நல நிதியில்‌ இருப்பில்‌ உள்ள தொகையின்‌அடிப்படையில்‌ மட்டும்‌, மாநில தேர்வுக்‌ குழுவினால்‌ தெரிவு செய்யப்படும்‌ மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகை ஒதுக்கீடு செய்து வழங்கப்படும்‌.


இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.