கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சிலின் 56ஆவது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் நான்கடுக்கு வரி விதிப்பு, 2 அடுக்கு வரி விதிப்பாக எளிமை ஆக்கப்பட்டுள்ளது. இதன்படி செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 5 மற்றும் 18 சதவீத வரி விதிப்புகள் மட்டுமே அமலுக்கு வர உள்ளன.

Continues below advertisement

நாட்டின் சுதந்திர தின உரையில் தீபாவளி பரிசாக இதைச் செய்வதாக, பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். அந்த வகையில் கல்வித் துறையில் மாணவர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலை ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்றம் கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கல்வி, கற்றல் சார்ந்த பொருட்களுக்கு, வரி விதிப்பு எப்படி மாறி இருக்கிறது என்று பார்க்கலாம்.  

Continues below advertisement

வரியே கிடையாது

இந்த சீர்திருத்தங்கள் மாணவர்களுக்கு நிவாரணம் அளிப்பதாக உள்ளன. குறிப்பாக, அத்தியாவசிய கற்றல் பொருட்களான பயிற்சி புத்தகங்கள், பென்சில்கள், அழிப்பான்கள், கிரேயான்கள் மற்றும் ஷார்ப்பனர்களுக்கு ஜிஎஸ்டி வரியே கிடையாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

5 சதவீதமாகக் குறைப்பு

கூடுதலாக, வடிவியல் பெட்டிகள் (geometry boxes), பள்ளி அட்டைப்பெட்டிகள் மற்றும் தட்டுகள் போன்ற பொருட்கள் 12% வரியில் இருந்து 5% ஆக மாற்றப்பட்டுள்ளன. இந்தக் குறைப்பு, கற்றல் அத்தியாவசியங்களை மிகவும் மலிவு விலையில் மாற்றும். அதேபோல குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் மற்றும் கற்றலை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

40 சதவீத வரி விதிப்பு

இந்த நிலையில் ஆடம்பரமான, உடலுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருட்களுக்கான வரி விகிதம் 40 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, புகையிலை மற்றும் தொடர்புடைய பொருட்கள், சர்க்கரை மற்றும் காற்றோட்டமான பானங்கள், சொகுசு ஆட்டோமொபைல்கள், பைக், விமானங்கள், கேமிங் மூலம் வருமானம், ஐபிஎல் விளையாட்டு பார்வையாளர் கட்டணங்கள் ஆகியவற்றுக்கு அதிகபட்சமாக 40 சதவீத அளவுக்கு வரி உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.