சிவகங்கையில் 37 இடங்கள் காலியாகவுள்ளன
2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியிலுள்ள மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில், மாவட்ட அளவிலான சேர்க்கை மற்றும் முன் விண்ணப்பமில்லா நேரடி சேர்க்கை ஆகியவைகளுக்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது. Anesthesia Technician, Theatre Technician ஆகிய பாடப்பிரிவுகளில் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படவுள்ளது. சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் Anesthesia Technician, Theatre Technician ஆகிய சான்றிதழ் படிப்புகளுக்கு மொத்தம்-37 இடங்கள் காலியாகவுள்ளன.
என்ன தகுதி
இதில், Anesthesia Technician பாடப்பிரிவின் கீழ்18 காலியிடங்களும், Theatre Technician பாடப்பிரிவின் கீழ் 19 காலியிடங்களும் உள்ளன. மேலும், காலியிடங்கள் தொடர்பான விவரங்களுக்கு www.gsmch.ac.in வலைதளத்தின் வாயிலாகவோ அல்லது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் அறிவிப்புப் பலகையினை பார்த்தும் அறிந்து கொள்ளலாம். இச்சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கு, விண்ணப்பதாரர் 31.12.2025 அன்று 17 வயது பூர்த்தி அடைந்தவராகவும், தெரிவுக், தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டவாறாகவும் பத்தாம் வகுப்பு, மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். மேலும், சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 5% இடஒதுக்கீடு உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்படும்.
கடைசி தேதி
மேலும், இச்சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி மையத்திலோ அல்லது சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அவர்களின் அலுவலகத்திலோ கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகின்ற 8.9.2025 ஆம் தேதி முதல் 12.9.2025 ஆம் தேதிக்குள் சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அவர்களின் அலுவலகத்தில் சமர்ப்பித்திடல் வேண்டும்.
சேர்க்கை
அவ்வாறாக, பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வருகின்ற 16.9.2025 அன்று தகுதிப் பட்டியல் வெளியிடப்படும். 20.09.2025 தேதி மாணாக்கர்கள் பாடப்பிரிவில் சேர்ந்திடல் வேண்டும். மேலும், நேரடி மாணவர் சேர்க்கையானது (மீதமுள்ள மாணவர் சேர்க்கை இடங்களுக்காக) 22.9.2025 ஆம் தேதியிலிருந்தும், முழு மாணவர் சேர்க்கை செயல்முறையானது 30.09.2025 அன்றும் நிறைவுப்பெறும். பாட வகுப்புகளானது வருகின்ற 06.10.2025 முதல் தொடங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்
இச்சான்றிதழ் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வானது சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெறும். மேலும், இக்கலந்தாய்வின் போது, மேனிலைப்பள்ளி மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் (பொருந்துமாயின்), சாதிச் சான்றிதழ், வயதுச் சான்று (பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ்),மாவட்ட மருத்துவ வாரியத்திடமிருந்து பெறப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ் (பொருந்துமாயின்), ஆதார் அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகிய அசல் ஆவணங்களை சமர்ப்பித்திடல் வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மேலும், தேர்வு செய்யும் நடைமுறை பரிந்துரைக்கப்பட்ட விதிகளின்படி முற்றிலும் தகுதி மற்றும் வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அமையும். கலந்தாய்வின் போது ஒதுக்கீடு ஆணைகள் அந்த இடத்திலேயே வழங்கப்படும். அதுமட்டுமன்றி, குறிப்பிட்டுள்ள பாடப்பிரிவுகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள், பொருந்தக்கூடிய விதிகளுக்குட்பட்டு, ”வெற்றி நிச்சயம்” திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். எனவே, தகுதியுள்ள மாணாக்கர்கள் சுகாதாரத் துறையின் சார்பில் வழங்கப்படும், திறன் அடிப்படையிலான சான்றிதழ் பாடப்பிரிவுகளில் பயில்வதற்கு இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.