இதுகுறித்து, இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் கூறி உள்ளதாவது:
தமிழ்நாடு அரசின் மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ இடங்களில் உள்ள அரசு மருத்துவர்களுக்கான 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் மூலம் (Service Quota) முதுநிலை மருத்துவப் படிப்புகளை படித்து வருகின்றனர்.
ஏழை மக்களுக்கு சிகிச்சை
இதனால், MBBS படித்து விட்டு தமிழக அரசு மருத்துவமனைகளில் வேலைக்கு சேரும் இளம் மருத்துவர்கள் பெரும்பாலோனோர், பல்வேறு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து படித்து விட்டு சிறப்பு மருத்துவர்கள் மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களாக பல துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைகளுக்காக வரும் ஏழை எளிய மக்களுக்கு சிறந்த சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
அது மட்டுமின்றி, மாவட்டம் தோறும் தொடங்கப்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப் பேராசிரியர்களாகவும் சேவை புரிகின்றனர்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் (National Medical Commission) விதிமுறைப்படி, போதிய எண்ணிக்கையில் மருத்துவப் பேராசிரியர்கள் இருப்பதனால் தற்பொழுது, பழைய/புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு, தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) அங்கீகாரத்தைப் பெற முடிகிறது. இது அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் விளைந்த பலனாகும்.
அரசு மருத்துவர்கள் தாங்கள் விரும்பும் முதுநிலை மருத்துவப் படிப்பை தெரிவு செய்து படிக்கும் உரிமை இதுவரை வழங்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக, தாங்கள் விரும்பிய முதுநிலை மருத்துவப் படிப்பை படித்து முடித்துவிட்டு, படைப்பாக்கத் திறனுடன் தாங்கள் விரும்பிய மருத்துவத் துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். தங்களின் துறை சார்ந்த திறமையால், ஏழை நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தரமான, சிறப்பான சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் நல மருத்துவம் போன்ற ஒரு சில முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தவிர, பிற துறைகளில் அரசு மருத்துவர்கள் பட்ட மேற்படிப்புகள் படிப்பதற்கு தடைவிதித்து அரசாணை எண் 151 யை, 01.07.2024 அன்று வெளியிட்டுள்ளது.இது அதிர்ச்சி அளிக்கிறது.
ஏழை நோயாளிகளின் நலன்களுக்கு எதிரானது
இது அரசு மருத்துவர்களின் நலன்களுக்கு மட்டுமன்றி, அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைகள் பெற வரும் ஏழை நோயாளிகளின் நலன்களுக்கு எதிரானதாகும். மேலும் தனியார், கார்ப்பரேட் மருத்துவமனைகளின் நலன்களுக்கு சாதகமானதாகும்.
ஏற்கனவே, தமிழ்நாடு அரசின் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவக் கட்டமைப்புகள் வலுவிழந்து வருகின்றன. வணிகமயமாகி வருகின்றன. தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவக் காப்பீட்டு திட்டம் மூலம் செழித்து வருகின்றன.
அரசு மருத்துவமனைகளை வலுவிழக்கச் செய்யும்
இந்நிலையில், அரசு மருத்துவர்கள் பல்வேறு துறைகளில் பட்ட மேற்படிப்பை படித்திட தடைபோடுவது, அரசு மருத்துவமனைகளை மேலும் வலுவிழக்கச் செய்யும். தனியார் மருத்துவமனைகளை மேலும் வலுப்படுத்தும்.
தமிழ்நாடு அரசு, அரசு மருத்துவமனைகளை பலவீனப்படுத்துவதும், தனியார் மருத்துவமனைகளுக்கு சாதகமாக செயல்படுவதும் பொதுசுகாதாரத்துறை கட்டமைப்பை சீர்குலைக்கும். இப்போக்கு, தமிழ்நாடு மக்களின் நலன்களுக்கு எதிராக அமைந்துவிடும்.
பொது சுகாதாரத் துறையை தனியார்மயமாக்கும் நோக்குடனும், வணிகமயமாக்கும் நோக்குடனும், பலவீனப்படுத்தும் நோக்குடனும் பாஜக அரசு செயல்படுகிறது. அதைப் போன்றே தமிழ்நாடு அரசும் செயல்படுவது கவலை அடையச் செய்கிறது.
அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது போராடி பெற்ற உரிமையாகும். அதை தமிழ்நாடு அரசு நீர்த்துப்போக செய்வது வருத்தமளிக்கிறது.
சில துறைகளில் முதுநிலை மருத்துவப் படிப்பை படித்த மருத்துவர்கள் போதிய அளவில் ,முழுமையாக (Saturation) இருப்பதாக காரணம் சொல்லப்பட்டு,தமிழ்நாடு அரசு, அரசாணை எண் 151 யை பிறப்பித்துள்ளது. இது தவறான முடிவாகும்.
தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு சாதகமா?
ஒன்றிய அரசு, பேராசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை 1:1 லிருந்து தொடர்ந்து குறைத்து வந்தது. அது தற்போது 1:4 வரை குறைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு சாதகமாக ஒன்றிய அரசு அவ்வாறு குறைத்தது.
இதன் மூலம், குறைந்த எண்ணிக்கையிலான பேராசிரியர்களுடன், குறைந்த செலவில், எளிதில் தனியார் மருத்துவக் கல்லூரிகள், அங்கீகாரத்தை பெறும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது. இதை பின்பற்றி, தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் பேராசிரியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவர்கள் (பேராசிரியர்கள்) எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு, வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொள்வதில்லை. இந்நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தரமான சிகிச்சை கிடைப்பதில் சிரமங்கள்
அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப , அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசின் பிற மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்கள் போதிய அளவில் நியமிக்கப்படவில்லை. இது பல்வேறு எதிர் விளைவுகளை உருவாக்கி உள்ளது.இதனால் மருத்துவர்களுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவ கல்வியின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கும் தரமான சிகிச்சை கிடைப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
இவற்றை கருத்தில் கொண்டு, புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டிய நிலை உள்ளது. இதைச் செய்யாமல், இத்தகய உண்மைகளை மறைத்துவிட்டு, போதிய மருத்துவ நிபுணர்கள் இருப்பதாக காரணம் கூறுவது சரியல்ல.
ஏற்கனவே, இளம் மருத்துவர்கள், வேலை வாய்ப்பை பெறும் உரிமையை பறித்துவிட்டு, தற்போது அவர்கள் விருப்பப்படி மேல் படிப்பு படிக்கும் வாய்ப்புகளையும் பறிப்பது நியாயமல்ல. இது சரியான போக்கல்ல. எனவே, கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
# அரசாணை எண் 151 யை, உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
# மருத்துவப் பேராசிரியர்கள்: மாணவர்கள் விகிதத்தை மீண்டும் 1:1 ஆக நிர்ணயிக்க வேண்டும்.
# தமிழ்நாடு அரசு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்.
# நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பேராசிரியர் வேலை என இல்லாமல், நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் பணிக்கு மட்டும் கல்வி சாராத மருத்துவ அலுவலர்களை (Non Academic Medical Officer ) நியமிக்க வேண்டும் என என்.எம்.சி அறிவுறுத்தி உள்ளது. அவ்வாறு மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
# அரசு மாவட்ட, வட்டார மருத்துவமனைகளில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க, புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கற்பிக்க, புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் பெற, போதிய பல்துறை முதுநிலை மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே, அரசு மருத்துவர்கள், பல்துறை முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் பயில வேண்டும்.
இவ்வாறு தமிழ்நாடு அரசை, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.