மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் சந்தித்துப் பேசினார். 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் ரவி நேற்று பிரதமரை சந்தித்த நிலையில் இன்று மத்தியக் கல்வி அமைச்சரைச் சந்தித்துள்ளார். 


நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நீட் தேர்வு எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன. இளநிலை நீட் தேர்வில் முறைகேடுகள் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, சிபிஐ வசம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டு விட்டது.


நீட் விலக்கு மசோதா


இதற்கிடையே சிபிஐ தீவிர விசாரணை நடத்தி, பலரைக் கைது செய்துள்ளது. நீட் தேர்வு தொடங்கியதில் இருந்தே எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்துவரும் தமிழ்நாடு அரசு, தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி அனுப்பியது. அது நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு காத்திருப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 


மாநிலக் கல்விக் கொள்கை


அதேபோல மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழக அரசு சார்பில் மாநிலக் கல்விக் கொள்கையும் தயாரிக்கப்பட்டது. இது முதல்வர் ஸ்டாலினிடம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஆளுநர் ஆர்.என்.ரவி இடையிலான சந்திப்பு நிகழ்ந்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. 


அரசு தரப்பு கூறியது என்ன?


தமிழ்நாட்டில் உயர் கல்வியின் தரத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் - ஆளுநர் ஆர்.என்.ரவி இடையிலான சந்திப்பும் கலந்துரையாடலும் நிகழ்ந்ததாக அரசு தெரிவித்துள்ளது.