தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகளாவிய ஜாம்பவானாகத் திகழும் கூகுள் நிறுவனம், மாணவர்களின் திறன்களை வளர்ப்பதற்காகப் பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.
அந்த வகையில் தொழில்நுட்பம் மற்றும் பொதுக் கொள்கை (Public Policy) விவகாரங்களில் அதிக ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு தலைசிறந்த வாய்ப்பாக, 2026ஆம் ஆண்டிற்கான கோடைக்கால கூகுள் ஃபெல்லோஷிப் (Google Summer Public Policy Fellowship 2026) திட்டத்திற்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் இதற்காகத் தற்போதே இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
இந்த மதிப்புமிக்க பெல்லோஷிப் திட்டமானது, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் சட்டக் கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தொழில்நுட்பம், சமூகம் மற்றும் சட்டம் சார்ந்த கொள்கைகளை ஆழமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
இதில் விண்ணப்பிக்கும் மாணவர்கள், தாங்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் பயில்வதற்கான அதிகாரப்பூர்வ சான்றாகத் தங்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சேர்க்கைக்கான ஆதாரங்களை தேவைப்படும்போது கூகுள் நிறுவனத்திடமோ அல்லது இந்தத் திட்டத்தை இணைந்து நடத்தும் நிறுவனங்களிடமோ சமர்ப்பிக்கத் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, அவர்கள் பணியாற்றும் காலத்திற்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன் மூலம், மாணவர்கள் முன்னணி சிந்தனைக் குழுக்கள், கொள்கை மையங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட முடியும்.
பொன்னான வாய்ப்பு
இணையப் பாதுகாப்பு, தரவுப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் உரிமைகள் போன்ற சமகால முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை உருவாக்கங்களில் நேரடி அனுபவம் பெற இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி, தேர்வு முறை மற்றும் பிற கூடுதல் விவரங்களை முழுமையாக அறிந்துகொள்ள, மாணவர்கள் கூகுளின் அதிகாரப்பூர்வ பெல்லோஷிப் இணையதளத்தைப் பார்வையிட்டு விரைவாக விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.google.com/policyfellowship/
