இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் அவர் இறந்துவிட்டதாக செய்திகள் வைரலான நிலையில், இஸ்ரேல் அதனை மறுத்து, அவர் நலமாக இருப்பதாக கூறியுள்ளது. எனினும், அவர்கள் வெளியிட்ட நெதன்யாகுவின் வீடியோ ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. மறுபுறம், ஒருவேளை அவர் உயிருடன் இருந்தால், அவரை தேடி கொல்வோம் என ஈரான் சபதம் செய்துள்ளது. இந்த குழப்பங்கள் குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
நெதன்யாகு இறந்ததாக பரவிய தகவல்
அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில், அதற்கு ஈரானும் தீவிரமாக பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில், சமீபத்தில் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகாயம் அடைந்ததாகவும், கொல்லப்பட்டதாகவும் தகவல் பரவி வைரலானது.
மேலும், அவர் இடிபாடுகளிலிருந்து காயத்துடன் வீரர்களால் மீட்கப்படுவது போன்ற புகைப்படம் ஒன்றும் வெளியானது. இதனால், சமூக வலைதளங்களில் நெதன்யாகு இறந்துவிட்டாரா என்ற விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
வெளியான வீடியோ - நெட்டிசன்களிடம் கிளம்பிய சந்தேகம்
நெதன்யாகு கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவிய சூழலில், அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது போல் ஒரு வீடியோ வெளியானது. அந்த வீடியோவில், ஒரு குறிப்பிட்ட இடத்தில், நெதன்யாகு கைகளை காட்டி பேசும்போது, அவரது கையில் 5-க்கு பதிலாக 6 விரல்கள் இருப்பது போன்று அந்த காட்சி அமைந்துள்ளது. மேலும், அவரது உடல் அசைவுகள் மற்றும் முக பாவனைகளும் இயற்கையாக இல்லை என்றும் கூறப்படுகிறது.
பொதுவாக, ஏஐ மூலம் உருவாக்கப்படும் வீடியோக்களில் இதுபோன்ற தொழில்நுட்பம் சார்ந்த குறைபாடுகள் ஏற்பதுவது வழக்கமான ஒன்றுதான். இதனால், அந்த வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்று கூறி, சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அது டீப்ஃபேக் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்றும் பலர் கருத்துக்களை கூறிவருகின்றனர்.
மறுபுறம், கடந்த சில நாட்களாக நெதன்யாகு தொடர்பான எந்த வீடியோவும் வெளியாகவில்லை. அதோடு, அவர் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காதது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவலை மறுத்த இஸ்ரேல்
முன்னதாக, ஈரானின் ஃபார்ஸ் மற்றும் தாஸ்னிம் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளில், நெதன்யாகு அலுவலகத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், நெதன்யாகு இறந்துவிட்டதாக பரவிய தகவலை இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பிரதமர் நெதன்யாகு குறித்து ஏஐ வீடியோ பரப்பப்படுவதாகவும், அவர் நல்ல உடல் நலனுடன் இருப்பதாகவும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
சூளுரைத்த ஈரான்
இதனிடையே, இது குறித்து பேசியுள்ள ஈரான் புரட்சிகர காவல்படை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒரு குற்றவாளி என்றும், குழந்தைகளை கொன்ற அந்த கொலையாளி இன்னும் உயிருடன் இருந்தால், அவரை பின்தொடர்ந்து கொல்வோம் என சூளுரைத்துள்ளது.
இந்த சூழலில், கார்க் தீவு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் அமெரிக்காவும் அதன் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது. இதனால், வரும் நாட்களில் என்ன ஆகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
