மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: கூகுள் ஜெமினியில் இனி இலவசமாக 'SAT' தேர்வு எழுதிப் பழகலாம்!

Continues below advertisement

கல்வி மற்றும் தொழில்நுட்ப உலகில் ஒரு முக்கிய மைல்கல்லாக, கூகுள் நிறுவனம் தனது ஜெமினி தளத்தில் மாணவர்களுக்காகப் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் SAT மாதிரித் தேர்வுகளை முற்றிலும் இலவசமாக எழுதிப் பயிற்சி பெற முடியும்.

வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு SAT எனப்படும் Scholastic Assessment Test (நுழைவுத் தொகை மதிப்பீட்டுத் தேர்வு) மிக முக்கியமானது. இந்தப் போட்டித் தேர்வுக்குத் தயாராவதற்குப் பொதுவாகப் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தாள்களுக்கு அதிகப் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

Continues below advertisement

இந்தக் குறையைப் போக்கும் வகையில், கூகுள் நிறுவனம் புகழ்பெற்ற கல்விப் பயிற்சி நிறுவனமான The Princeton Review உடன் கைகோத்துள்ளது. இதன்படி, SAT தேர்வுக்கு முழுமையான, இலவசமான மாதிரித் தேர்வுக்கான பயிற்சியை கூகுள் ஜெமினி வழங்குகிறது. 

பயன்படுத்துவது எப்படி?

  • மாணவர்கள் கூகுள் ஜெமினி பக்கத்துக்கு செல்லுங்கள்.
  • அதில், ’’SAT பயிற்சித் தேர்வை மேற்கொள்ள விரும்புகிறேன் (I want to take a practice SAT test)’’ என்று கேட்டு Enter செய்தால் போதும்.
  • உடனே தேர்வுத் தாள் திரையில் தோன்றும்.
  • அதில் தேவையான பயிற்சிகளை எடுத்துக்கொள்ளலாம். 

சிறப்பம்சங்கள் என்ன?

இந்தக் கூட்டு முயற்சியின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள் அனைத்தும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டவை என்பதால், தரத்தைப் பற்றி மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல இந்த வசதியின் ஆகச்சிறந்த அம்சம், தேர்வு எழுதிய உடனேயே கிடைக்கும் முடிவுகள்தான். மாணவர்கள் ஒரு கேள்வியைத் தவறாகப் புரிந்து விடையளித்திருந்தால், சரியான விடை என்ன என்பதையும், அதை எப்படி அணுக வேண்டும் என்பதையும் ஜெமினி உடனடியாக விளக்குகிறது. இது மாணவர்கள் தங்கள் தவறுகளிலிருந்து உடனுக்குடன் கற்றுக்கொண்டு, அடுத்த முறை சிறப்பாகச் செயல்பட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற போட்டித் தேர்வுகளுக்கும் விரிவாக்கம்

இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்று கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது SAT தேர்வில் தொடங்கியுள்ள இந்த வசதி, விரைவில் மற்ற முக்கியப் போட்டித் தேர்வுகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

உயர்கல்வி கனவோடு இருக்கும் மாணவர்களுக்கு, குறிப்பாகப் பொருளாதார ரீதியாகப் பின் தங்கியுள்ள திறமையான மாணவர்களுக்கு, இந்த முன்னெடுப்பு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.