புதுச்சேரி: மகாகவி பாரதியாரின் 144ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் புலமும், வானவில் பண்பாட்டு மையமும் இணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதில் புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் வரும் கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணத்தில் 60 விழுக்காடு தளர்வு வழங்கப்படும் என புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ்பாபு தெரிவித்தார்.
பாரதியார் ஒரு உலகக் கவிஞர்
புதுச்சேரியில் மகாகவி பாரதியாரின் 144ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் புலமும், வானவில் பண்பாட்டு மையமும் இணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ்பாபு அவர்கள் மையவுரையாற்றினார்.
துணைவேந்தர் தனது உரையில், மகாகவி பாரதியார் தமது தாய்மொழியான தெலுங்கைக் குறித்துப் பாடிய “சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து” என்ற வரியை மேற்கோள் காட்டினார். மேலும் அவர் கூறியதாவது: பாரதியார் அனைத்து மொழிகளையும் சமமாக மதித்தவர், உலக மொழிகளின் இலக்கியங்களையும் விரிவாக வாசித்தவர். அவர் தமிழ் மொழியை உயிர்போல் நேசித்த அதே நேரத்தில், எல்லா மொழிகளையும் அன்போடு அணைத்துக்கொண்ட உலகப் புகழ்பெற்ற கவிஞர்.
பாரதியார் ஒரு தேசியக் கவிஞராக மட்டுமல்லாமல், சுதந்திரப் போராட்ட வீரர், பெண்ணுரிமை முன்னோடி, சாதி ஒழிப்பில் பாடுபட்ட புரட்சிகர சமூகச் சீர்திருத்தவாதி, தொழிலாளர் உரிமை, சமத்துவம், உலக சகோதரத்துவம் போன்ற உயர்ந்த மனிதநேயக் கோட்பாடுகளை உலகளாவிய பார்வையுடன் எடுத்துரைத்த “உலகக் கவிஞர்” ஆவார். இக்கோட்பாடுகளை இன்றைய தலைமுறை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதே பாரதிக்குச் செய்யும் உண்மையான மரியாதை என்றும் துணைவேந்தர் குறிப்பிட்டார்.
தமிழ் மாணவர்களுக்குக் கட்டணச் சலுகை
மேலும், தமிழுக்கும் தமிழ் துறைக்கும் சிறப்பு சேர்க்கும் விதமாக, துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ்பாபு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்: "புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் வரும் கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணத்தில் 60 விழுக்காடு தளர்வு வழங்கப்படும். அதிலும் குறிப்பாக தமிழ் துறையில் சேரும் தமிழ் மாணவர்களுக்கு 66 விழுக்காடு வரை கட்டணத் தளர்வு வழங்கப்படும்." இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாணவர் நலன் சார்ந்த அறிவிப்பை கேட்டவுடன், அங்கு கூடியிருந்த மாணவ-மாணவிகள் வரவேற்று நன்றி தெரிவித்தனர்.