தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொது தேர்வு நடத்தலாமா என தீர்மானிக்க ஆசிரியர், பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்கள் என அனைவரிடமும் கருத்துகளை கேட்டு வருகிறது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு மாணவர்களுக்கு பிளஸ் 2 தேர்வு எந்த அளவு முக்கியம், அதில் நீடிக்கும் சந்தேகங்கள் மற்றும் சவால்கள் குறித்து கல்வியாளர் ரமேஷ் பிரபாவிடம் உரையாடினோம்.


பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழகத்தில் நடத்தப்படவேண்டுமா ? அல்லது ரத்து செய்யப்படவேண்டுமா ?


1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தேர்வு வேண்டாம் என முடிவு செய்வதில் தவறில்லை, ஆனால் பிளஸ் 2 பொதுத்தேர்வு என்பது உயர்கல்விக்கான தகுதியை தீர்மானிப்பது, அதன் அடிப்படையில்தான் அடுத்தடுத்த படிப்புகளில் நாம் சேரமுடியும். ஒரு வேலை அத்துடன் படிப்பை நிறுத்திக்கொண்டாலும், பிளஸ் 2 முடித்துள்ளது என்பதே ஒரு தகுதி. அதுதான் மற்ற தேர்வுகளை காட்டிலும் பிளஸ் 2 தேர்வுக்கு இருக்கக்கூடிய ஒரு முக்கியத்துவம், அதனால் நிச்சயம் பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழகத்தில் நடத்தப்படவேண்டும்.


சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளதே?


ஒட்டுமொத்தமாக இந்தியாவில் சிபிஎஸ்சி படிப்பவர்கள் எண்ணிக்கையை எடுத்து கொண்டோமானால் 10 லட்சம் மாணவர்கள் இருப்பார்கள், அனால் தமிழகத்தில் மட்டுமே மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் அதிகமாக வரும். அதனால் அவர்களை பார்த்து நாம் முடிவு செய்வது என்பது சரியானது இல்லை. சிபிஎஸ்சி பயில்பவர்கள் பெரும்பாலும் வசதிபடைத்த மாணவர்களாக இருப்பார்கள், ஆனால் நம் மாநில வழி மாணவர்களின் கல்வி முறை, பயிலும் முறை அனைத்துமே வேறு. அதனால் சிபிஎஸ்சி உடன் நம்முடைய பிளஸ் 2 பொதுத்தேர்வை ஒப்பிடுவது எந்த அளவிலும் சரியாக இருக்காது, இதில் தமிழ்நாடு அரசு தன்னிச்சையான முடிவை எடுக்க வேண்டும்.


சரி பிளஸ் 2 தேர்வு நடத்தினால் எப்போது நடத்தலாம் ?


தற்போது கொரோனா பாதிப்பு சற்றே இறங்க தொடங்குவதுபோல் தெரிகிறது, அதனால் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் வாக்கில் பிளஸ் 2 தேர்வை நடத்தலாம். 3 மாதம் தள்ளி நடத்துவதால் எந்த பிரச்னையும் இல்லை.


தேர்வு முறை எப்படி இருந்தால் நல்லது ?


எளிமைப்படுத்தப்பட்ட தேர்வுமுறை தேவை, ஏனென்றால் இந்த முறை பெரும்பாலான பாடத்திட்டம் ஆன்லைன் வகுப்புகளாக நடைபெற்றுள்ளது. நேரில் படித்தாலே பொதுத்தேர்வு சிரமம், இதில் பள்ளிக்கு போகாமல் படித்தால் மிகவும் சிரமம். எளிமையான வினாக்கள் வடிவமைக்கப்பட வேண்டும், மல்டி சாய்ஸ் வகையிலான வினாக்கள் இருக்கவேண்டும். ஷார்ட் பதில்கள் நிறைந்து இருக்க வேண்டும், தேர்வின் நேரத்தை குறைக்கவேண்டும். இது போன்று மாணவர்களை கடுமையான சிரமங்களுக்கு ஆளாக்காமல் தேர்வு நடத்தவேண்டும். மேலும் முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்துவது குறித்தும் பரிசீலிக்கவேண்டும்.


தேர்வு நடைபெறுவது குறித்து தெளிவின்மை நீடிப்பது மாணவர்களுக்கு அழுத்தம் ஏற்படுத்தும்!


ஆம் பலமுறை தேதிகள் மாற்றப்பட்டுவிட்டது, மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டே இருந்தால் அழுத்தம்தான். ஒரு தேதியை உறுதியாக சொல்வதை விட, தேர்வு நடைபெறும் ஒரு காலகட்டத்தை தீர்மானித்து, குறைந்தபட்சம் நடைபெறுவதற்கு 15 நாட்கள் முன்பாக நிச்சயம் அது குறித்து அறிவிப்பை வெளியிடுவோம். நீங்கள் தயாராக போதுமான கால அவகாசம் இருக்கும் என்ற உறுதியை மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.


தமிழ்நாடு அரசுக்கு தேர்வை நடத்துவதில் உள்ள சிக்கல் - அதற்கு தீர்வு!


மாணவர்கள் ஒன்று கூடுவது, வெளியே பயணம் செய்வதுதான் தேர்வை நடத்துவதில் மிகப்பெரிய சிக்கல். மாணவர்கள் யாருக்கேனும் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டால், அது சிபிஎஸ்சி வேண்டாம் என சொல்லியும் தேர்வை நடத்தியதால் வந்த பிரச்சனை என்ற இடத்தில் வந்து நிற்கும். அதனால் மாணவர்களுக்கு அருகாமையில் உள்ள பள்ளியை தேர்வு மையமாக அறிவிக்க வேண்டும். மேலும் அனைத்து பள்ளிகளும் தற்போது விடுமுறைதான், அதனால் வகுப்புகள் எல்லாம் காலியாகத்தான் இருக்கப்போகுது, வகுப்புக்கு 10 மாணவர்களை வைத்துகூட தேர்வு நடத்தலாம்.  


ஆன்லைனில் தேர்வு நடத்தலாமா ?


தவறான முடிவாக அமையும், வசதிபடைத்த மாணவர்கள் லேப் டாப் கொண்டு தேர்வு எழுதுவார்கள், கிராமத்தில் உள்ள ஏழை மாணவர்கள் இன்டர்நெட் வசதிக்கு எங்கே செல்வார்கள். அது மாணவர்கள் மத்தியில் உள்ள ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும். மேலும் பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வுகளிலேயே குழப்பங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை, அதனால் ஆன்லைன் தேர்வு சரியானதாக இருக்காது.


சிபிஎஸ்சி தேர்வு நடத்தாமல் மதிப்பெண் தரவுள்ளது, அதே நேரம் நாம் தேர்வு நடத்தி மதிப்பெண் கொடுத்தால் ? கவுன்சிலிங் என வரும்போது சிக்கல் ஏற்படாதா ? 


சிபிஎஸ்சி எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்போகிறார்கள் என்பது தற்போது வரை வெளியிடப்படவில்லை. 0.25 கட் ஃஆப் மதிப்பெண்ணில் கூட மாணவர் சேர்க்கையின்போது இடம் பறிபோகலாம், அதனால் மிக உன்னிப்பாக அதை தமிழக அரசு கவனித்து தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும். 


ஒரு வேலை தேர்வு நடத்தமுடியாத நிலையில் ரத்து செய்யப்பட்டால் என சிக்கல் ?


மாணவர்களின் மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்படும். தேர்வு நடைபெற்று இருந்தால், நான் மதிப்பெண் எடுத்து இருப்பேன் என்ற பேச்சுகள் வரும். அதனால் அப்படி ரத்து செய்யப்பட்டால் மதிப்பெண்ணை நிர்ணயிக்க மிக சரியான வழிமுறையை தீர்மானிக்கவேண்டும்.


தேர்வு ரத்து எண்ட்ரன்ஸ் நுழைவு தேர்வு முறைக்கு வழிவகுக்குமா ?


சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வையே ரத்து செய்துள்ளது, அப்படி மிக முக்கியமான தேர்வையே எழுத முடியாத நிலையில், நுழைவு தேர்வு மட்டும் எப்படி எழுத முடியும். இது தான் இங்கே குழப்பம். இந்த ஒரு வருடம் எப்படி அணைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுகிறதோ, அதே போன்று நீட், ஜெஇஇ உள்ளிட்ட நுழைவு தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.


பொதுத்தேர்வும் இல்லை, நுழைவு தேர்வும் இல்லையெனில் எப்படி ?


பொது தேர்வு ரத்து  செய்யப்பட்டாலும், நிச்சயம் மதிப்பெண் என்பது மாணவர்களுக்கு வழங்கப்படும். அதன் அடிப்படையிலேயே கல்லூரி சேர்க்கை நடைபெற வேண்டும். அதனால் நுழைவு தேர்வு அவசியம் என்பதில்லை.


பொது தேர்வு நடத்தாமல், மதிப்பெண் எப்படி தீர்மானிக்க படலாம் ?


ஏற்கனவே செய்முறை தேர்வுகளை நாம் நடத்திவிட்டோம், அது ஒரு நல்ல விஷயம். அதனால் முக்கிய பாடங்களில் அது அடிப்படையில் குறிப்பிட்ட மதிப்பெண் வந்துவிடும். மேலும் ஆசிரியர்கள் இன்டர்னல் மார்க் முறையில், மாணவர்களின் செயல்பாட்டை வைத்து மதிப்பெண் வழங்கலாம், அதன் பின் இந்த வருடம் மாணவர்கள் இதற்குமுன் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றை கொண்டு மதிப்பெண் கணக்கீடு செய்யப்படலாம்.


இறுதியாக என்ன அறிவிப்பு வரலாம்?


எந்த அறிவிப்பை வெளியிட்டாலும் அது சர்ச்சையாகவே பேசப்படும். தேர்வு நடத்தினாலும் சரி, தேர்வு நடத்தாமல் போனாலும் சரி அதில் விமர்சனம் வரவே செய்யும். ஆனால் தமிழகத்திற்கு ஒரு நல்ல விஷயம் தலைமை செயலாளர் இறையன்பு, முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஆகிய இருவருமே சிறந்த கல்வியாளர்கள். அதனால் மேம்போக்கான ஒரு முடிவை எடுக்க மாட்டார்கள். கல்வியாளர்கள் 80 சதவீதம் தேர்வு நடைபெறவேண்டும் என்றே வலியுறுத்தி வருகின்றனர். அதனால் சிறிது நாட்கள் தாமதமானாலும் பிளஸ் 2 பொது தேர்வு நடைபெறவே அதிகப்படியான வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன்