பொறியியல் மேற்படிப்புகளில் சேர நடத்தப்படும் 2024ஆம் ஆண்டு கேட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம். 


மத்திய அரசு சார்பில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) என்னும் உயர் கல்வி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும்.  


ஆண்டுதோறும் நடைபெறும் கேட் தேர்வை ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஐஐஎஸ்சி எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமோ நடத்துகின்றன. இந்த ஆண்டு கேட் தேர்வை ஐஐஎஸ்சி எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் நடத்துகிறது.


பிப்ரவரி மாதத்தில் கேட் தேர்வு


ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். அந்த வகையில் இந்த கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் தேர்வு, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 3, 4, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 


2024-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு விண்ணப்பப் பதிவு நாளை (30ஆம் தேதி) முதல் தொடங்க உள்ளது. விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு, செப்டம்பர் 29ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெற உள்ளது. மாணவர்கள் தாமதக் கட்டணத்துடன் அக்டோபர் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து நவம்பர் 7 முதல் 11ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்.


மார்ச் 16-ல் தேர்வு முடிவுகள்


2024 ஜனவரி 3 முதல் கேட் தேர்வுக்கான  ஹால் டிக்கெட்டைப் பெறலாம். அடுத்த ஆண்டு பிப்ரவரி 3, 4, 10 மற்றும் 11-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. மார்ச் 16ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. மார்ச் 23ஆம் தேதி முதல் மதிப்பெண் அட்டையை பெற்றுக் கொள்ளலாம். 


கணினி வாயிலாக நடைபெறும் கேட் தேர்வு, ஒவ்வொரு நாளும் காலை மற்றும் பிற்பகலில் இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும் மதியம் 2.30 மணி முதல் 5.30 வரையிலும் நடைபெறுகிறது. குறிப்பாக 100 மதிப்பெண்களுக்கு 29 தாள்களுக்கு நடைபெற உள்ளது. 


விண்ணப்பிப்பது எப்படி?


முதல்கட்டமாக மாணவர்கள் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். 


https://goaps.iisc.ac.in/register என்ற இணைப்பை க்ளிக் செய்து, பெயர், இ -மெயில் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றைப் பதிவிட்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 


தொடர்ந்து சேர்க்கை ஐ.டி.  அல்லது இ -மெயில் முகவரி (Enrollment Id / Email Address) மூலம் லாகின் செய்து பார்க்கலாம்.  https://goaps.iisc.ac.in/login


தேர்வு மையங்கள் குறித்து அறிய: https://gate2024.iisc.ac.in/exam-cities/


உதவி எண்கள்: 080 2293 2644 / 3333


முழுமையான விவரங்களுக்கு: https://gate2024.iisc.ac.in/