பூஜ்ஜிய நிழல் தினத்தை முன்னிட்டு மத்திய அரசு நடத்தும்  இலவச பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு சான்றிதழ்களைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், அறிவியல் பலகை , கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் சென்னை ராஜலட்சுமி தொழில்நுட்ப கல்லூரி சார்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பூஜ்ஜிய நிழல் தினம் பற்றிய ஒரு நாள் பயிற்சிப் பட்டறை 15 ஏப்ரல் அன்று  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 



இந்த பயிற்சிப் பட்டறைக்கு ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒரு ஆசிரியர் மற்றும் 5 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் நிழலில்லா தினம் பற்றியும், பகல் நேர வானவியல், நேனோ சூரியக் குடும்பம், ஸ்பெக்ரோகோப் ஆகியவை பற்றிய செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏப்ரல் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பூஜ்ஜிய நிழல் தினம் நிகழ உள்ளது. 


சூரியனை வைத்துப் பல்வேறு பொருட்களுடைய நிழலின் நீளங்களை உற்றுநோக்குவது என்பது சிறந்த கற்றல் அனுபவமாகவும், மகிழ்வான செயல்பாடாகவும் இருக்கும். ஒரு வருடத்தின் இரண்டு நாட்களில் மட்டுமே பொருளின் நிழல், அப்பொருளுக்கு மிகச் சரியாகக் கீழே விழுவதால் நம்மால் அப்பொருளின் நிழலை உச்சி வேளையில் காண இயலாது. அந்த நாட்கள் நிழல் இல்லாத நாள் அல்லது பூஜ்ஜிய நிழல் நாள் என்று அழைக்கப்படுகின்றன.





இந்த நாளை உற்றுநோக்குவதன் மூலம் நம்மால் சூரியனின் இயக்கம், பூமியின் ஆரம், பூமியின் நேரம், நாம் இருக்கக்கூடிய இடத்தின் அட்சரேகை அமைப்பு ஆகியவற்றைக் கண்டறியலாம். மேலும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான் பூமியின் விட்டத்தைக் கண்டுபிடித்தனர்.


இது போன்ற பகல் நேர வானியல் நிகழ்வுகளை உற்று நோக்குவதன் மூலமாக பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டையும் ஏற்படுத்த முடியும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட உள்ளது. 


இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. அத்தோடு மட்டுமல்லாமல் பூஜ்ஜிய நிழல்  தினத்தினை உற்று நோக்கத் தேவையான செயல்விளக்கக் கருவிகளும் வழங்கப்பட உள்ளன. 




இந்நிகழ்வில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://forms.gle/syJ5dvJ8gxDy7mCW8 என்னும் இணைப்பின் மூலம் பதிவு செய்யலாம். பதிவு செய்யக் கடைசித் தேதி: 14 ஏப்ரல் 2022. 


மேலும் தகவல்களுக்கு: கண்ணபிரான், ஒருங்கிணைப்பாளர், கலிலியோ அறிவியல் கழகம்


தொடர்பு எண்: 8778201926