தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் அரசு ரூ.383 கோடி நிதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ சட்டம்- RTE) சிறுபான்மையினர் பள்ளிகள் அல்லாத, தனியார் சுயநிதிப் பள்ளிகளில் படிக்க சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஆகும் செலவினங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அரசே வழங்கி வருகிறது.
2011 முதல் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்
இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. நாடு முழுவதும் 2010-ஆம் ஆண்டு இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. தமிழக அரசு கடந்த 2011ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தியது.
இந்த 25 சதவீத இட ஒதுக்கீட்டில் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள், எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்பது தொடர்பான விவரங்களைப் பொதுவெளியில் தனியார் பள்ளிகள் அறிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பெற்றோர் மத்தியில் பரவலாக எழுந்தது. செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே சிறப்பு ஒதுக்கீட்டில் இடம் கிடைப்பதாகவும் கூறப்பட்டது.
இதனால் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன் விண்ணப்ப முறை 2017-ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள சுமார் 9,000 தனியார் பள்ளிகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் இடங்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 12(1) (c)-ன் படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கையானது தமிழகத்தில் சீரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
2013- 2014ஆம் கல்வியாண்டு முதல் இச்சேர்க்கை தொடங்கப்பட்டு, 2017- 2018ஆம் கல்வி ஆண்டு முதல் 25% இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கைக்கான விண்ணப்பம் இணைய வழியாகப் பெறப்பட்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது.
2021 வரை நிலுவை இல்லை
2021- 22ஆம் கல்வியாண்டில் இவ்வகைச் சேர்க்கையின் கீழ் பயிலும் குழந்தைகளுக்கான கல்விக் கட்டண தொகை ரூ.364.44 கோடி, அனைத்து பள்ளிகளுக்கும் 2021-2022ஆம் கல்வியாண்டு வரை நிலுவையில்லாமல் வழங்கப்பட்டுவிட்டது.
2022-23ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட 65,946 குழந்தைகள் மற்றும் தொடர்ந்து பயின்று வரும் குழந்தைகள் 3,51,122 சேர்த்து மொத்தம் 4,17,068 மாணாக்கர்களின் விவரங்கள் மாவட்டங்களில் குழுவால் சரிபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளிகளுக்கு ஈடு செய்யும் தொகை ரூ.383.59 கோடியினை வழங்க அரசாணை வழங்கப்பட்டுள்ளது. அத்தொகையினை விரைவாக பள்ளிகளுக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2023-24 ஆம் கல்வியாண்டில் 1,85,406 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் தகுதியுள்ள 70,553 குழந்தைகள் சேர்க்கப்பட்டு பயின்று வருகின்றனர். 2024- 2025ஆம் நிதியாண்டில் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டபின் இதற்கான கல்விக்கட்டணம் தனியார் பள்ளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.