சென்னை அளவில் முதல் மதிப்பெண் பெற்று வறுமையின் காரணமாக கல்லூரி சேர முடியாமல் இருந்த ஏழைத் தொழிலாளியின் மகளுக்கு, மூன்றாண்டுகள் எந்த கட்டணமுமின்றி படிக்க எத்திராஜ் கல்லூரி சார்பில் இலவச சீட் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பிகாம் பொதுப் பிரிவில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாணவி ஜெயஸ்ரீ முதலிடம்
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி பள்ளியில் படித்து வந்த மாணவி ஜெயஸ்ரீ என்பவர் 572 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பெற்றார்.
அவரது தந்தை மெக்கானிக்கல் வேலை செய்து வரும் நிலையில் மேற்கொண்டு, அவரை கல்லூரியில் சேர்க்க வைக்க முடியாத நிலை இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த எத்திராஜ் கல்லூரி நிர்வாகம், அந்த மாணவியின் பெற்றோரை அழைத்து அவர் மூன்று ஆண்டு எந்தக் கட்டணமும் செலுத்தாமல் படிப்பதற்கான ஆணையை வழங்கியுள்ளனர். மேலும் மாணவியின் குடும்பத்தாரை நேரில் அழைத்து கௌரவித்துள்ளனர்.
குடும்பத்தின் வாழ்க்கைத் தரமே மாறிவிடும்
இது குறித்து கல்லூரியின் சேர்மன் முரளிதரன் கூறும்போது, ’’கல்வி என்பது ஒரு சேவை. அதனை இது போன்ற இல்லாத மாணவர்களுக்கு கொடுக்கும்போது அவர்களுடைய வாழ்க்கைத் தரம் மட்டுமில்லாமல் அந்த குடும்பத்தின் வாழ்க்கைத் தரமே மாறிவிடும்’’ என்று தெரிவித்தார். மேலும், இதுபோன்று நல்ல மதிப்பெண் பெற்று மிக மிக பின் தங்கிய நிலையில் இருக்கும் பிள்ளைகளை கண்டறிந்து ஸ்காலர்ஷிப் வழங்கி கல்வி கொடுத்து அவர்களை வாழ்வில் முன்னேற்ற தங்களுடைய கல்வி நிறுவனம் உதவி வருவதாகவும் தெரிவித்தார்.
நல்ல மதிப்பெண் பெற்று இருந்தும் தன்னால் உயர் கல்வியில் சேர முடியுமா என சந்தேகத்தில் இருந்த நிலையில், எத்திராஜ் கல்லூரி நிர்வாகம் கொடுத்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி படித்து அரசுப் பணிக்கு செல்வதுதான் தன்னுடைய லட்சியம் என மாணவி ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
மாணவிக்கு சேர்க்கைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாக குழு தலைவர் V.M. முரளிதரன், கல்லூரியின் முதல்வர் உமா கௌரி, துணை முதல்வர்கள் விஜயா மற்றும் ஜெயந்தி ஆகியோருடன் மாணவியின் பெற்றோரும் பங்கேற்றனர்.