ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சௌதாலா பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வந்தது அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தின் முதல்வராக நான்கு முறை பதவி வகித்தவர் இந்திய தேசிய லோக் தல் கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் சௌதாலா. அண்மையில் அவர் அங்கே 10 வகுப்பு ஆங்கிலத் தேர்வு எழுத வந்தது பெரிய அளவிலான ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவின் சிர்ஸாவில் உள்ள ஆர்ய கன்யா சீனியர் பள்ளியில் அவர் தனது தேர்வை எழுதினார்.
மிக அண்மையில்தான் ஹரியானா திறந்தவேளிப் பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்புக்கான தேர்வை எழுதியிருந்தார் ஓம் பிரகாஷ் சௌதாலா. ஆனால் அவர் 10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் இன்னும் தேர்ச்சி பெறவில்லை என்கிற அடிப்படையில் அவரது தேர்வு முடிவுகளை வெளியிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. தனது 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகளைப் பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் புதன் அன்று 10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வை எழுதினார் சௌதாலா.
தேர்வு மையத்துக்கு வந்த சௌதாலாவை பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டனர். ‘நான் தற்போது மாணவராக வந்திருக்கிறேன்.அதனால் எந்தக் கருத்தும் கூறப்போவதில்லை’ என பத்திரிகையாளர்களின் அரசியல் கேள்விகளுக்கு ‘நோ கமெண்ட்ஸ்’ சொல்லிச் சென்றார் சௌதாலா. இதன் பிறகு 86 வயதான சௌதாலா தேர்வு அறைக்குச் சென்றார்.
2017ல் தனது பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த சௌதாலா அதில் 53.4 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
தனக்கான எழுத்தர் உதவியையும் கேட்டிருந்தார் சௌதாலா. அதனை ஹரியானா பள்ளிக்கல்வித்துறை ஏற்றுக்கொண்டு அவருக்கான எழுத்தர் உதவியையும் செய்துகொடுத்தது.சுமார் இரண்டு மணி நேரம் தேர்வு எழுதிய சௌதாலா பிறகு அங்கிருந்து புறப்பட்டார்.
கடந்த 2017ல் தனது பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த சௌதாலா அதில் 53.4 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தார். உருது, அறிவியல், சமூக அறிவியல் மற்றும் இந்தியக் கலாச்சார பண்பாடு ஆகிய பாடங்களில் சிறப்பான தேர்ச்சியை எட்டியிருந்தார். ஆசிரியர் தேர்வாணையத்தின் பலகோடி ரூபாய் ஊழலில் சிக்கி திகார் சிறை சென்றவர் அங்கிருந்தபடியே பத்தாம் வகுப்புக்கான தேர்வை எழுதினார்.கொரோனா பெருந்தொற்றுக்கு நடுவே அவர் சிறையில் இருந்து இரண்டு முறை பரோலில் விடுவிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூலை மாதத் தொடக்கத்தில்தான் அவர் சிறையிலிருந்து விடுதலையானார்.
ஆசிரியர் தேர்வாணைய நியமன ஊழல்
ஹரியானா மாநிலத்தில் 1999-2000ம் ஆண்டில் சௌதாலா முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் பள்ளிகளுக்கான மூன்றாயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்ததில் ஊழல் செய்ததாக ஓம் பிரகாஷ் சௌதாலா மற்றும் அவரது மகன் அஜய் சௌதாலா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை அந்த மாநிலத்தின் ரோகினி நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி தந்தை மகன் இருவர் உட்பட 53 குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சுமார் ஏழு ஆண்டுகள் திஹார் சிறையில் இருந்த ஓம் பிரகாஷ் சௌதாலா தண்டனைக் காலம் முடிய சில மாதங்களே இருக்கும் நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அண்மையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.