பள்ளிக்‌ கல்வித்‌துறை அமைச்சர் அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி, கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள 12 மாவட்டங்களின்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுடன்‌ ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்‌. காணொலிக்‌ காட்சி வாயிலாக பள்ளிகளின்‌ தற்போதைய நிலை மற்றும்‌ மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ குறித்து கூட்டத்தில் பேசப்பட உள்ளது.


ஃபெஞ்சல் புயல் சென்னை தவிர்த்து பெரும்பாலான வட கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய பகுதிகல் தாண்டி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம்‌, தருமபுரி, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, வேலூர்‌ மற்றும்‌ நீலகிரி ஆகிய மாவட்டங்களும் பெருத்த சேதத்தைச் சந்தித்துள்ளன. 


7 பேர் பலியான துயரம்


திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 3 முறை நிலச் சரிவு ஏற்பட்டதில், 7 பேர் பலியாகினர். பள்ளிகளுக்குத் தொடர்ந்து விடுமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 12 மாவட்டங்களின்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுடன்‌ அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்‌.


இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:


பள்ளிக்‌ கல்வித்‌துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி இன்று (03.12,2024) பிற்பகல்‌ 3 மணி அளவில்‌ ஃபெஞ்சல்‌ புயலால்‌ பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம்‌, கடலூர்‌, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம்‌, தருமபுரி, திருப்பத்தூர்‌, செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர்‌ மற்றும்‌ நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுடன்‌ காணொலிக்‌ காட்சி வாயிலாக பள்ளிகளின்‌ தற்போதைய நிலை மற்றும்‌ மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.


என்னென்ன முடிவுகள் எடுக்கப்படும்?


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பள்ளிகள் திறப்பில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள், பள்ளிகள் திறப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.