ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை


ஃபெஞ்சல் புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் வடமாவட்டங்கள் மட்டுமின்றி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனக் கூட்டம் நடைபெற உள்ளது. கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டத்தில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.



ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி


திருவண்ணாமலையில் பாறை சரிந்து விழுந்து மண்ணுக்கு அடியில் சிக்கிய, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தலா ரூ.5 லட்சம் நிவாரணமும் அறிவித்துள்ளார். தேசிய பேரிடர் மீட்பு படையினரின் முயற்சிகள் பலனளிக்காமல் போனது துரதிஷ்டவசமானது எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.


மக்களவையில் திமுக நோட்டீஸ்


ஃபெஞ்சல் புயல் நிவாரணம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்கக் கோரி திமுக எம்.பி., கனிமொழி நோட்டீஸ். இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடி வழங்குவது குறித்தும், ஒன்றிய குழுவை அனுப்புவது குறித்தும் விவாதிக்க கோரிக்கை. சீரமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவை என தமிழ்நாடு அரசு மதிப்பீடு


மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை


ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி 59 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் பழவேற்காடு மீனவர்கள் நாளை (டி.4) கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலி


கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியை சேர்ந்த 11 மாணவர்கள் கொச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இரவு 9 மணியளவில் காலர்கோடு அருகே உள்ள சாலையில் வேகமாக சென்ற கார் எதிரே வந்த அரசு பஸ் மீது மோதியது. இதில் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.


5 மாதங்களில் 769 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை


ஒடிசா மாநிலத்தில் கடந்த ஐந்து மாதங்களில் 769 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக, வழக்குகள் பதிவாகி உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி சட்டசபையில் தெரிவித்துள்ளார். 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தள கட்சியை தோற்கடித்து கடந்த ஜூன் 12ம் தேதி ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.


இந்தியா வருகிறார் புதின்


பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, அதிபர் புதினின் இந்திய வருகைக்கான தேதிகள் 2025 ம் ஆண்டின் தொடக்கத்தில் நிர்ணயிக்கப்படும் என்றும் கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு புதினின் இந்தியா வருகை குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது, இதன்படி அவர் அடுத்த ஆண்டு குவாட் உச்சிமாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய பைடன்


வரி செலுத்துவதில் முறைகேடு, சட்டத்திற்கு புறம்பாக துப்பாக்கி வைத்து இருந்தது தொடர்பான வழக்குகளில் பைடனின் மகன் ஹண்டர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு பல ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் தான், அதிபர் என்ற தனது அதிகாரத்தை பயன்படுத்தி மகன் ஹண்டருக்கு பைடன் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.


பி.வி. சிந்துவிற்கு திருமணம்


இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்துவிற்கு வரும் டிசம்பர் 22ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் செயல் இயக்குநராக இருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை உதய்பூரில் வரும் 22ம் தேதி மணக்கிறார்.


தென்னாப்ரிக்கா வீரர்கள் 3 பேர் கைது


தென் ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் லோன்வாபோ சோட்சோபே (வயது 40), தமி சோல்கிலே (வயது 44) மற்றும் எதி எம்பலாட்டி (வயது 43) ஆகியோர் ஆட்டத்தின் முடிவை முன்கூட்டியே நிர்ணயம் (மேட்ச் பிக்சிங்) செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
2015-ம் ஆண்டு உள்ளூர் டி20 தொடரான ராம் ஸ்லாம் தொடரில் 3 பேரும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.