100% தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தலைமையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் விழா நடைபெற உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு முதல் முறையாக இந்தப் பாராட்டு விழா நடக்க உள்ளது.
இதுகுறித்துத் தனியார் பள்ளிகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சுமார் 4 ஆயிரம் பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி
’’2023- 2024 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 2199 தனியார் மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளிகளும், பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 1750 தனியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளும் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
மேலும், தனியார் பள்ளிகளைச் சார்ந்த 78 மாணவ/ மாணவியர்கள் சர்வதேச அளவிலும், 255 மாணவ/ மாணவியர் தேசிய அளவிலும், 1579 மாணவ/ மாணவியர் மாநில அளவிலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளனர்.
ஆகஸ்ட் 4ஆம் தேதி பாராட்டு விழா
மேற்கண்டவாறு 100% தேர்ச்சி பெற்ற பள்ளி நிர்வாகிகள், பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாராட்டி ஊக்குவிக்கவும், சர்வதேச/ தேசிய/ மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்ற மாணவ/ மாணவியரை மென்மேலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு அரசு சார்பில் முதன்முறையாக 04.08.2024 அன்று சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையிலும் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும் சர்வதேச/ தேசிய மாநில அளவில் பதக்கங்களை வென்ற மாணவ/ மாணவியர்களுக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்க உள்ளார்’’ என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அரசுப் பள்ளிகளில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.