2025ஆம் ஆண்டுக்கான பிப்ரவரி மாதம் நாளை தொடங்கும் நிலையில், மாணவர்களுக்கு எப்போது அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம்.


பள்ளி, கல்லூரிகளுக்கு வகுப்புகள் தொடங்கி நடக்கும் பட்சத்தில், விடுமுறை எப்போது விடப்படும் என்று மாணவர்களும் ஆசிரியர்களும் காத்திருப்பர். அந்த வகையில் டிசம்பர் மாதம் ஃபெஞ்சல் புயல் காரணமாகப் பெய்த மழை மற்றும் அரையாண்டுத் தேர்வு விடுமுறை ஆகியவற்றுக்காக அதிக நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது.


ஜனவரி மாதத்தில் 10 நாட்கள் விடுமுறை


அதேபோல ஜனவரி மாதத்தில் ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறை, பொங்கல் பண்டிகை ஆகியவற்றுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், மாணவர்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி இருந்தனர்.


நாளை பிறக்கும் பிப்ரவரி


இந்த நிலையில், பிப்ரவரி மாதம் நாளை (பிப்.1) பிறக்கிறது. இந்த மாதத்தில் பெரிதாக விடுமுறைகள் எதுவும் இல்லை. எனினும் பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. செவ்வாய்க் கிழமை அன்று தைப்பூசம் வருவதால், முந்தைய நாளான திங்கள் கிழமை அன்று ஒருநாள் விடுமுறை எடுத்தால் போதும்.


முந்தைய சனி, ஞாயிற்றுக் கிழமையோடு 4 நாட்கள் தொடர் விடுமுறையை அனுபவிக்க முடியும் என்று மாணவர்களும் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் திட்டமிட்டு வருகின்றனர்.


மகா சிவராத்திரிக்கும் விடுமுறையா?


அதேபோல தைப் பூசத்தை அடுத்து, மகா சிவராத்திரி பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி வர உள்ளது. இதற்கு சில கல்வி நிறுவனங்கள் விடுமுறை அளிக்கும். எனினும் இது அரசு விடுமுறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


பள்ளிக் கல்வித்துறை நாட்காட்டி சொல்வது என்ன?


இதற்கிடையே பள்ளிக் கல்வித்துறை, பிப்ரவரி மாதத்துக்கான கல்வி நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. அதில், பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிப்.8, 9 (சனி, ஞாயிறு விடுமுறை), பிப்.16 ஞாயிற்றுக் கிழமை அன்று விடுப்பு அளிக்கப்பட உள்ளது.


அதேபோல, பிப்ரவரி 22, 23 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிறு விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இதையும் வாசிக்கலாம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு- முக்கிய விதிகள் என்ன?