நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிப்பு செய்யப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக வெளியான தகவலை அடுத்து, PIB விளக்கம் அளித்துள்ளது. 


கொரோனா தொற்று


கோவிட் 19 எனப்படும் கொரோனா தொற்றானது, கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கி உலகம் முழுவதும் பரவியது. உருமாறிய கொரோனா  வைரஸ் (  BF.7 வகை  ) இந்தியாவிலும் பரவி தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


ஏற்கனவே கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை, 3ஆவது அலை என புரட்டி எடுத்ததைப் போலவே, அடுத்த கொரோனா அலையாக, உருமாறிய கொரோனா பரவலும் சீனாவில் அதிகரித்து வருகிறது. இதனால் சீனாவின் மருத்துவமனைகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சீனாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக இந்த உருமாறிய வைரஸ் தொற்றால், வயதில் முதிர்ந்தவர்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இன்றைய இந்திய நிலவரம்


இந்தியாவில் இன்று (ஜனவரி 5ஆம் தேதி) 2,554 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுளன. 201 பேர் அதாவது 98.8 % பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 3 பேர் அதாவது 1.19 % பேர் பலியாகி உள்ளனர். தினசரி சுமார் 16 தொற்றாளர்கள் அளவுக்கு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதுவரை மொத்தம் 4,46,79,319 கொரோனா தொற்றுகள் பதிவாகி உள்ளன. 


இதுகுறித்து PIB எனப்படும் மத்திய அரசின் தகவல் மையம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில், ’’சமூக வலைதளங்களில் கோவிட் 19 காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்றும் தகவல் பரவி வருகிறது. 


ஆனால் இவை அனைத்தும் போலியான செய்திகளே’’ என்று மத்திய அரசின் தகவல் மையம் தெரிவித்துள்ளது. 






பள்ளிகள் மூடல்


இதற்கிடையே குளிர் காரணமாக லக்னோவில் பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்மு, காஷ்மீர் மற்றும் டெல்லியில் குளிர்கால விடுமுறை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.