டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உடனடி தீர்வு வழங்க வேண்டும் என்று பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

’’டெட் (TET) தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான அவகாசத்தை 2028 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் வழங்கியிருப்பது ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு நம்பிக்கையளிக்கும் முக்கியமான முடிவாகும். இந்த தீர்ப்பு, பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தையும், மாணவர்களின் கல்வி நலனையும் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது.

Continues below advertisement

தமிழகத்தில் பல ஆசிரியர்கள் நீண்ட காலமாக பள்ளிகளில் பணியாற்றி வந்தாலும், டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால் அவர்களின் பணிநிலை, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள கால அவகாசத்தை தமிழக அரசு முழுமையாகப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் நலனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

பணி பாதுகாப்பு, பயிற்சியை உறுதி செய்க

குறிப்பாக, டெட் தேர்வில் இன்னும் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கான பாதுகாப்பை உறுதி செய்தல், அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் மற்றும் சிறப்பு பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல், தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்தல் ஆகிய நடவடிக்கைகள் அவசியமாகும்.

கல்வி என்பது ஆசிரியர்களின் அர்ப்பணிப்பால் வளர்கின்ற துறை. பல ஆண்டுகளாக மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கி வரும் ஆசிரியர்களின் பணியை மதித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் தமிழக அரசு மனிதநேய அடிப்படையில் அணுக வேண்டும். உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த அவகாசத்தை ஒரு வாய்ப்பாகக் கருதி, பாதிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் நிரந்தரமான மற்றும் நியாயமான தீர்வை தமிழக அரசு விரைவாக அறிவிக்க வேண்டும்.

ஆசிரியர்களின் நலன் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே கல்வித் துறையின் தரமும், மாணவர்களின் எதிர்காலமும் பாதுகாக்கப்படும் என்பதை தமிழக அரசு கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீகாந்தி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.