நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், நாளை சிறப்பு சட்டப்பேரவை கூடி மீண்டும் இந்த மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப உள்ளது. இந்நிலையில், ஆளுநர் இந்த மசோதாவை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை விளக்கமாக சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக, ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டிருந்தது. ஆர்.என்.ரவி என்ன காரணங்களை எல்லாம் அடுக்கி இந்த மசோதாவை திருப்பி அனுப்பினார் என்ற கேள்வி பலரது மத்தியிலும் எழுந்தது.



ஆளுநர் ஆர்.என்.ரவி


ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் முழு விவரங்கள் இடம்பெறவில்லையென்பதால், அது குறித்த தெளிவு இல்லாமல் பலரும் அனுமாங்களின் அடிப்படையில் பேசிவந்தனர். அதுமட்டுமில்லாமல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர் அனுப்பிய அறிக்கையின் முழு விவரத்தினை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிடவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.


இந்நிலையில், ஆளுநர் ஆ.என்.ரவி நீட் விலக்கு மசோதாவை மறுபரிசீலனை செய்யச்சொல்லி சபாநாயருக்கு அனுப்பிய முழு அறிக்கையின் விவரங்கள் ’ABP நாடு’ செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.



நீதியரசர் ஏ.கே.ராஜன்


அந்த அறிக்கையில், நீட் விலக்கு தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவை ஆளுநர் ஆர்.என்.ரவி  கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட காரணமாக உள்ள ஏ.கே.ராஜன் கமிட்டியின் அறிக்கை ‘காமாலை கண் கொண்டவர்கள் தயாரித்ததுபோல்’ உள்ளது என்று சபாநாயகருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளார் என தகவல் கிடைக்கப்பெற்றிருக்கிறது. ஆனால். ஏ.கே.ராஜன் பெயரை குறிப்பிடாமல் குழு, குழு என்றே தனது கடிதத்தில் சொல்லியுள்ளார் ஆளுநர்.


சமூகத்திலும் நீதித்துறையிலும் மதிப்புமிக்க நீதிபதியாக இருந்து, பல்வேறு குழுக்களில் அங்கம் வகித்த ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜனையும் அவர் சார்ந்த குழுவையும் ’காமாலை கண்கொண்டவர்கள்’ என அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட ஆளுநர் குறிப்பிட்டு சபாநாயகருக்கு அனுப்பியிருப்பது அவர் ஏ.கே.ராஜனை மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசையும் அவமதிக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார் என சட்டமன்ற உறுப்பினர்களும் சமூக நீதிக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களும் கொதித்திருக்கிறார்கள்.


அதோடு, இந்த நீட் விலக்கு மசோதாவை நான் ஏன் திரும்ப அனுப்புகிறேன் என்ற காரணத்தையும் ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டியலிட்டுள்ளார்



  • நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதாரமாக உள்ள ஆய்வு குழுவின் அறிக்கை ஆதாரங்களை அடிப்படையாக கொள்ளாமல் அனுமாங்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது.



  • நீட் இலக்கு இல்லாத ஒரு தேர்வு என பொத்தம்பொதுவாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது



  • தகுதியற்ற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் வழிவகை செய்யும் என அறிக்கையில் பொவாக குறிப்பிடப்பட்டுள்ளதை ஏற்க முடியாது



  • பொருளாதார ரீதியாக செல்வாக்குள்ள மாணவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வு உகந்தது என்பதுபோல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.


  • நீட் தேர்வின் முக்கியத்துவத்தை உணராமல் ‘சமூக நீதிக்கு எதிரானது’ என்ற வாதத்தினை மட்டுமே முன் வைத்து, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது




இந்த காரணங்கள் எல்லாம் ஏற்கத்தக்கதாக இல்லை என நான் கருதுகிறேன் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளதாகவும்,  இயற்பியல், வேதியியல், உயிரியியல் போன்ற பாடங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டதாக நீட் தேர்வு உள்ளது என்றும் அனைத்து பாடங்களை கொண்ட அறிவை சோதிக்க நீட் தேர்வு தவறியிருக்கிறது எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை தான் மறுப்பதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது



மருத்துவ படிப்பு என்பதே ’இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் அறிவை கொண்ட விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டதுதான் என்றும், அதனை குற்றச்சாட்டாக கூறுவதை ஏற்க முடியாது எனவும் ஆளுநர் ஆர்.ரவி சபாநாயகருக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிடுள்ளார் என்றும்,  அதுமட்டுமின்றி நீட் தேர்வு வந்த பிறகுதான் ஏழை அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என நமக்கு கிடைத்த தகவல்கள் சொல்கின்றன.


முக்கியமாக, இந்த நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்றும், தனியார் மூலம் பயிற்சி பெறும் வசதி படைத்த மாணவர்களுக்கானதாக இந்த நீட் உள்ளது என்றும் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது உண்மைக்கு புறம்பானது என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, அதேபோல், அரசியலமைப்பு சட்டத்துடன் நீட் தேர்வு ஒத்துப்போகிறது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை என்றும், நீட் தேர்வு சமூகநீதிக்கு ஒருபோதும் எதிரானது அல்ல என்பதையும் அழுத்தம் திருத்தமாக ஆளுநர் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என கூறப்படுகிறது



சபாநாயகர்  அப்பாவு - ஆளுநர் ரவி


மேலும், நீட் தேர்வு என்பது தேச நலனை கருத்தில்கொண்டு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றமே கருத்து சொல்லியிருப்பதையும் தனது அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த நீட் விலக்கு மசோதா மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இல்லை என்றும், இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டியிருப்பதால் அரசியலமைப்பு சட்டம் 200ன் படி இதனை மறுபரிசீலனை செய்ய தாம் திரும்ப அனுப்புவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.