சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலேயே முதல் மதிப்பெண் பெற்ற ஏழை மாணவி பூங்கோதைக்கு, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி 100% உதவித்தொகையோடு பி.காம். படிப்புக்கான சேர்க்கையை உறுதி செய்துள்ளது.
மாநிலம் முழுவதும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில் மாணவ – மாணவிகள் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள், 96.44 சதவீதம் பேரும் மாணவர்கள் 92.37 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.03 சதவீதமாக இருந்த நிலையில், இந்த முறை தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
ஒரு பள்ளி மட்டும் 100 சதவீதத் தேர்ச்சி
மாநிலம் முழுவதும் மொத்தம் 2478 மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், 397 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளைப் பொறுத்தவரை நுங்கம்பாக்கம் மகளிர் மேல்நிலைப் பள்ளி மட்டும் 100 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றிருந்தது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 35 மேல்நிலைப் பள்ளிகளில் 4,998 மாணவர்கள் தேர்வு எழுதினர். அவற்றில் 4355 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 87.13 தேர்ச்சி சதவீதம் பதிவானது. இது கடந்த ஆண்டை விட 0.27 சதவீதம் அதிகம் ஆகும். 56 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
முதலிடம் பிடித்த பூங்கோதை
இந்த நிலையில் பெரம்பூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பூங்கோதை, 600-க்கு 578 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார்.
ஆட்டோ ஓட்டும் ஏழைத் தொழிலாளியின் மகள் பூங்கோதை சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதல் இடம் பெற்ற நிலையில், அவரை கவுரவித்து ஊக்கப்படுத்தும் வகையில், எத்திராஜ் மகளிர் கல்லூரி 100% உதவித்தொகை உடன், B.Com படிப்புக்கான இடம் வழங்கியது. இதற்கான ஆணையை கல்லூரி நிர்வாகக் குழு தலைவர் முரளிதரன் வழங்கினார். இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் உமா கௌரி, துணை முதல்வர் விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னையில் 1948ஆம் ஆண்டு எத்திராஜ் என்பவரால், இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. 96 மாணவிகளுடன் தொடங்கப்பட்ட எத்திராஜ் கல்லூரியில் தற்போது 7,800 மாணவிகள் படிப்பது குறிப்பிடத்தக்கது.