ஊதிய முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் அளிக்க வேண்டும் என்று கோரி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் பேராசிரியர் அன்பழகன் (டிபிஐ) வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2ஆவது நாளாக இந்தப் போராட்டம் நேற்று தொடர்ந்து வந்தது. 


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. அதே ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூ.5,200 வரையே அடிப்படைஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. அடிப்படை ஊதிய வேறுபாடு காரணமாக மொத்த ஊதியம் ரூ.15,500 வரை குறைத்து வழங்கப்படுகிறது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதை அடுத்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். எனினும் அவர்களின் கோரிக்கையை திமுக, அதிமுக அரசுகள் நிறைவேற்றவில்லை. இந்நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் அளிக்க வேண்டும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி வந்தனர். 


2 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம்


சங்க ஆசிரியர்கள் சென்னை பேராசிரியர் அன்பழகன் (டிபிஐ) வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வி அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்டு, ஊதிய வேறுபாட்டை களையக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். 


மாற்றுத் திறனாளிகள் இரண்டாவது நாளாக போராட்டம்


அதேபோல, அரசுக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர் பணி வழங்கக் கோரி பார்வையற்ற பட்டதாரிகளும்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரக வளாகத்தில் 2-வது நாளாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தல்


உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட இடைநிலை ஆசிரியர்களில் 6 பேர் இன்று காலை மயங்கியதைத் தொடர்ந்து, ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 




இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:


’’ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி  சென்னை நுங்கம்பாக்கத்தில் இடைநிலை ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் 6 பேர் இன்று காலை மயங்கியதைத் தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது!


31.05.2009 வரை பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கு அடுத்த நாள் அதாவது 01.06.2009  முதல் பணியில் சேரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200 எனக் குறைத்து நிர்ணயிக்கப்படுகிறது. இது நியாயமல்ல!


அடிப்படை ஊதிய வேறுபாடு காரணமாக மொத்த ஊதியம் ரூ.15,500 வரை குறைகிறது. ஒரே நிலையில் கற்பித்தல் பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு பாகுபாட்டுடன் ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதை  ஏற்க முடியாது. இந்த பாகுபாட்டைப் போக்க வேண்டியது அரசின் கடமை!


ஊதிய முரண்பாட்டைக் களையக் கோரி ஆசிரியர்கள் பத்தாண்டுகளாகப் போராடி வருகின்றனர். முந்தைய ஆட்சியில் இருமுறை அவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது அவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இப்போதாவது ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்’’.


இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.