இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு 7 சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் கூறி உள்ளதாவது: தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 01.06.2009-க்கு பின் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்கள், 01.06.2009-க்கு முன் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்களுக்கு இணையான ஊதியம் கோரும் கோரிக்கைகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஏழு சங்கங்களின் பிரதிநிதிகள்
இதன் நான்காவது கூட்டம் நாளை (11.09.2025 அன்று) நடைபெற உள்ளது. இதன் அடிப்படையில், சம வேலைக்கு சம ஊதியம் குறித்த கோரிக்கை சார்பாக, குழுவின் தலைவர் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் 04.09.2025 நாளிட்ட அரசுக் கடிதத்தின்படி 11.09.2025 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் கீழ்க்காணும் அட்டவணையின்படி நடைபெறவுள்ள கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏழு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். மேலும் இக்கூட்டத்திற்கு ஒரு சங்கத்திற்கு இரு பிரதிநிதிகளுக்கு மிகாமல் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
என்னென்ன சங்கங்கள்?
- அனைத்திந்திய ஆசிரியர் பேரவை
- தமிழ்நாடு தொடக்க நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்
- தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
- ஜே.எஸ்.ஆர். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
- தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் (TIAS)
- தமிழக ஆசிரியர் மன்றம்
- ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
எங்கே? எப்போது?
கருத்துக் கேட்புக் கூட்டம் பள்ளிக் கல்வித் துறை கூட்டரங்கு, 6-வது தளம், நாமக்கல் கவிஞர் மாளிகை, தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் 11.09.2025 மணி பிற்பகல் 03.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இவ்வாறு தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.